நெருப்புப் பழம்
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
அன்னைத் தமிழ் ஈழம்
என்றன் உயிர்த்தாயகம்
தன்னை வென் தொட்டான்?
தமிழா எழுக! என
மின்னை இடியைப்
புயலைத் தமிழ்செய்தேன்...
என்னைக் கொடுங்கவிஞன்
என்றார் நிறையிட்டார்...
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
ஓங்கு நெடுமதில்கள்
உள்ளே இருட்கோலம்
தாங்க முடியா நோய்
தாகம் பசிக்கொடுமை
தீங்கு படைக்கும்
கொடியர் சிறைக்கோட்டம்
ஏங்கி ஒரு தமிழன்
இங்கு மடிகின்றேன்...
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
என்னே இவ்வையம்!
எனைப்போல் ஒரு மனிதன்
மண்ணாள இங்கே
வளைந்துயான் அம்மனிதன்
சொன்னடி கைகள்
கட்டித் தொழும்பியிற்றும்
பொண்ணைப் பயலானேன்...
போதும்! இதுபோதும்!
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
வானில் கிளி பறக்கும்...
வண்ணக் கொடிமுல்லை
தான் நினைந்த பக்கம்
தழுவிப் படர்ந்திருக்கும்
மாநிலத்தே யான்
அட! இம் மதில் நடுவில்
ஏனிப்படி இருந்தேன்?
என்ன பிழை செய்தேன்?
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
பட்டு நிலா வான்
மிசை எழப் பாரெங்கும்
கொட்டு முழவிசையில்
கூத்தாட வையத்தின்
எட்டுத் திசையும்
மகிழத் தமிழன்யான்
மட்டும் துயர் தாங்கி
மாளப் பிறந்தேனா?
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
"நானோ அடிமை?"
என நா விளிக்கிறது!
கூனோ டிருக்கும்
உடலம் கொதிக்கிறது!
தேனோ மரணம்
என நெஞ் சொலிக்கிறது!
ஏனோ விழியில்
இரத்தம் பனிக்கிறது
நெருப்புப் பழம் ஒன்று
நெஞ்சில் கனிகிறது...!
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)