அழுகின்றோம் அழுகின்றோமே!

இலையொன்று வீழ்தல் கூடும்
இறகொன் றுதிர்தல் கூடும்
மலையொன்று சாய்வ துண்டோ?
மானத்தர் தமிழீ ழத்தில்
தலையொன்று வீழ்ந்த தையா!
தந்தை செல்வாவைக் கால
அலையொன்று சாய்த்த தையா!
அழுகின்றோம்... அழகின் றோமே!

மொழி இனம் நாடு மூன்றும்
மூச்சாக வாழ்ந்தார் ஐயா!
இழிவாகும் மாற்றினத்தார்
எமை ஆள்தல் என்றார்! எங்கள்
விழிதனைத் திறந்து வைத்தார்!
தனிவிழி மூடி இன்றேன்
அழிவெனும் சாவில் வீழ்ந்தார்?
அம்மவோ! எதுயாம் செய்வோம்?

வஞ்சினம் உரைத்தெழுந்து
வண்டமிழ் ஈழம் வாழ
நஞ்சினர் முன்அறப்போர்
நடத்திய எங்கள் தந்தை
துஞ்சினர்... உலக வாழ்வு
துறந்தனர் எனவந் தெங்கள்
நெஞ்சினில் பாய்ந்த சேதி
நெருப்பினைவார்த்த சேதி!

முடிஇலா அரசர் ஐயா
முழுச்செல்வர் எனினும் வாழ்வில்
கொடியவெஞ் சிறையிருந்தார்!
கொலைவெறிச் சிங்க ளத்தர்
பிடிநின்று தமிழ்மண் காக்கும்
பெரும்போரில் தனைஅழித்தார்!
விடிவொன்று காணுமுன்னம்
வீழ்ந்தாரே... விம்முகின்றோம்!

எந்தையின் கொள்கை என்றும்
ஈழத்தார் வாழ்வாய் நிற்கும்!
செந்தமிழ் ஈழ மண்ணில்
செல்வா கால்தட மிருக்கும்!
சிந்தையில் அவர்பொன் மேனி!
சிலைபோல நிலைத்திருக்கும்!
அந்த நாள் அவர்வாய்ச் சொற்கள்
அழியாதெம் காற்றில் வாழும்!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:52 pm)
பார்வை : 84


மேலே