குழப்பம்

காசி ஆனந்தன்
கோடித் தடந்தோளாம்! அங்கே
குன்றமொரு குவையாம்!
ஆடி வருங் கடல்கள் - களத்தில்
ஆயிரம் ஆயிரமாம்!

விழியும் நெருப்பு மொன்றே! - மறவர்
விரைவும் புயலுமொன்றே!
மொழியும் இடியுமொன்றே! - வெம்போர்
முனையை எதுமொழிவேன்?

உள்ளம் மலைக்குவமை! - அங்கே
உடல்கள் புலிக்குவமை!
வெள்ளம் படைக்குவமை! - மறவர்
வெறிக்கும் உவமையுண்டோ?

மெய்கள் சிலிர்த்திடவே - வீரம்
மிளிர்ந்த களப்புறத்தில்...
ஐயோ! ஒரு நொடியில் - நிகழ்ந்த
அழிவை எதுபுகல்வேன்?

கூனல் விதிக்கிழவி - பாவி
கொடுமை இழைத்தனளோ?
மான மறத்தமிழன் - அடடா
மதியை இழந்தனனோ?

என்ன மொழி யுரைப்பேன்? - இந்த
இழிவின் நிலை சிறிதோ?
தென்னர் படைக்குவியல் - களத்தே
சிதைந்து குலைந்ததடா!

பார்ப்பான் மிகவுயர்ந்தோன்...- அவனே
படையை நடத்திடுதல்
சேர்க்கும் பெருமையென்றான் - ஒருவன்
சின்னச் செயல் புரிந்தான்!

ஓங்கி வளர்ந்த மரம் - காற்றில்
உடைந்து விழுந்தது போல்
ஆங்கு தமிழ்மறவர் - நூறாய்
ஆனார் நொடியினிலே!

ஆதிப் புகழுடையோர் - உழவர்
என்றார் சிலர் அடித்தே!
சாதிக் கொடுமையடா! - இதுதான்
சனியன் எனும் பொருளோ?

செம்படவன் குதிப்பான்! - ஆங்கே
செட்டி செருக்குரைப்பான்!
கும்பம் சரிந்ததுபோல்.... தமிழர்
கூட்டம் சிதைந்தடா!

கண்கள் அனல் சுழற்ற - நெஞ்சம்
காய்ந்து சருகுபட
விண்ணில் இடிசிதற - நானோ
வேதம் முழக்குகின்றேன்.


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:55 pm)
பார்வை : 38


மேலே