விடுதலை வெண்பா

சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்தி நிலை
காண்போ மதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.

பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டா லாங்கதுவே வீடாம் - நெறி கொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் தீர்ந்த தறிவு.

அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.

வேலைப் பணிந்தால் விடுதலையாம்; வேல்முருகன்
காலைப் பணிந்தாற் கவலைபோம் - மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்திசக்தி சக்தியென்று
சொன்னா லதுவே சுகம்.

சுகத்தினை நான்வேண்டித் தொழுதேன்; எப்போதும்
அகத்தினிலே துன்புற் றழுதேன் - யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
ஆறுதலைத் தந்தா ளவள்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Jul-11, 1:00 pm)
பார்வை : 135


பிரபல கவிஞர்கள்

மேலே