பகவத் கீதை

புறப்படு தோழனே!
ஒவ்வொரு நாளும்
போராட்டம் தான்!
களம் மாறும் வாள் வீசும்
கை மாறும்! எதிரிகளின்
புலம் மாறும் என்றாலும்
போராட்டம் மாறாது!

ஒப்பந்தம் தற்காலிகமானது!
உயிரையே பணயம் வைத்து
நடத்தும்
நிஜமான போராட்டமே
நிரந்தரமானது!

கை குலுக்குகிறவர்களைப் பற்றி
கவனமாய் இரு!
அவர்களது கைகளுக்குள்
பொய் குலுங்கிக் கொண்டிருப்பதைப்
புரிந்து கொள்!

வார்த்தைக் கடிதங்களுக்குள்
இல்லாமல் இருப்பது
இதயத்தின் விலாசம்!
உட்கார்ந்திருப்பதோ
உதட்டுகளின் முத்திரை!

சூரியனும் சந்திரனும்
சுற்றிச் சுற்றி வருவது
நீ பட்ட
காயங்களையெல்லாம்
கணக்கெடுக்கத்தான்!

திடீர் திடீர் என்று
உன்னை நோக்கி
வீசப்படுவதெல்லாம்
வெடி குண்டுகள் அல்ல…..
விழிப்பு மாத்திரைகள்!

அழகான புன்னகைகளை நம்பி
ஆயுதங்களைக் கீழே போடாதே!
உலகம் உன்னைத்
தாக்குவதற்காகத்தான்
தருணம் பார்த்திருக்கிறது.

உறைக்குள் வாளை
ஒரு நாளும் போடாதே!

சமாதானப் புறா
பறக்க முடியாது…
துப்பாக்கி முனைகளின்
துணையில்லாமல்!


கவிஞர் : மு. மேத்தா(2-Nov-11, 2:13 pm)
பார்வை : 162


பிரபல கவிஞர்கள்

மேலே