பிரதிகளின் அரசியல்

பிரதிகளைப் பற்றி உனக்கென்ன தெரியும்
அதன் வாசனைகளில் நஞ்சை பரப்புவதை தவிர
லிபிகளை உன்னால் சவுக்காக்க முடியுமெனில்
உன் பிரதி வீண்
கண்ணீராலும் காயங்களாலுமான
என்பிரதிகள் ஒருபோதும் உன்னை இரவாதன
உன்னுடையதை ஒத்த ஒருசாயலும்
என்பிரதிகளுக்கு வாய்த்திடாத நாளே
எனக்கு எப்போதும் வேண்டும்
யோனிகளையும் முலைகளையும்
எடுத்துத் துப்பும் உன் பிரதிமைகளை விடுத்து
நான் நடக்கிறேன் வெகுதொலைவில்
ஆனால் அவற்றின் வீரிய எழும்புதலில்
உடைந்து வெளியாகும் என் பிரதிகள்
உனக்கான உன் கருத்துரிமைகளை
வாய்க்கிழிக்கின்றன உன் பிரதிகள்
பசியடங்கா வயிற்றுக்கும்
படாய்படும் வாழ்வுக்குமாய்
முனங்குகின்றன என்னுடையவை
அழுகையின் வீறலையோ
மழையின் சாரலையோ
ரத்தத்தின் கறைகளையோ
ஒருபோதும் விடாதவை என் பிரதிகள்
உன் போலல்ல வெறும் வெற்றுத்தாள்கள்


எங்களால் முடியும் எல்லாவற்றையும் விட
நீ தாங்குவது எமக்கு முக்கியம்
எங்கள் தாக்குதலது வலிமையின்
ஆதாரம் காலம் தந்தது

கால்களின் உதைகளை விட
கண்களின் கொடூரம் சொடுக்கிய
உன் அடையாளப் பதிவுகள்
எங்கள் காலத்தின் எல்லா பக்கங்களிலும்

எனினும் இன்னும் சொல்கிறோம்
வசிப்பிடத்தின் போதாமை குறித்தோ
நீங்கள் பிடுங்கிய எங்கள் சோற்றின்
உப்புக் குறித்தோ கவலை ஏதுமில்லை

ஆதாரங்களின் சுழல்லில்
வரலாறுகளாக வடிக்கப்பட்ட
எம்வாழ்வின் மீது கரைத்து ஊற்றப்பட்ட
கறைகளை துடைப்பதன்றி
நக்குவது வேறொன்றும் இல்.


சிதைவுற்ற என் பிராயத்திலிருந்து
புறப்படுகின்றேன் நான்
ஏதுமற்ற என் இருப்புகளின் மீதெல்லாம்
கேள்விகளை எழுப்பலாம் நீங்கள்
ஆதிமுதலே இப்படித்தான்
மரபாய் மௌனத்தையே கடைபிடித்து
வந்தோம்
உங்கள் கேள்விகளே பெரும்புயலாய்
சுழற்றியடித்து
புழுதிப்படிந்த சேரியின் மீது மிகப்பாந்தமாய்
அமர்ந்துக் கொள்கின்றன
புரிபடாத உங்கள் கடவுளர்களைப் போல


கவிஞர் : யாழன் ஆதி(2-Nov-11, 5:05 pm)
பார்வை : 74


மேலே