வியர்வைக் கடல்

அதிகாலை
கிழக்கு வெளுக்குமுன் வெளியிலற் கிளம்பினேன்
ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி; நிசப்தம்,
இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி!
உத்ஸாகம் எனைத் தூக்கி ஒடினது!

இயற்கை
குன்றம் இருக்கும் அக்குன்றத்தின் பால்
குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும்
அழகு செய்யும்! அவ்விடத் தில்தான்
என்றவன் சொந்த நன்செய் உள்ளது.

பகல்
கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர்
வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!
புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது.
இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்.

வயல்
வளம்பெற நிறைந்த இளம்பயிர்ப் பசுமை
மரகதம் குவிந்த வண்ணம் ஆயிற்று;
மரகதக் குவியல்மேல் வாய்ந்த பனித்துளி
காணக்கண் கூசும் வயிரக் களஞ்சியம்!
பரந்தஎன் வயலைப் பார்த்துக்கொண் டிருந்தேன்
மகிழ்ச்சி தவிர மற்றொன்று காணேன்!

உழைப்பு
களையினைக் களைவது கருதி, எனது
பண்ணை ஆட்கள் பலபேர் வந்தனர்.
என்னை வணங்கினர்; வயலில் இறங்கினர்.
வில்லாய் வளந்தது மேனி; அவர்தோள்
விசையாய்க் களைந்தது களையின் விளைவை!
முகவிழி கவிழ்ந்து வயலில் மொய்த்தது.

நடுப்பகல்
காலை போதினைக் கனலாற் பொசுக்கிச்
சூரியன் ஏறி உச்சியிற் சூழ்ந்தான்.
சுடுவெயில் உழவர் தோலை உரித்தது;
புதுமலர்ச் சோலையில் போய்விட்டேன் நான்.


வெயில்
குளிர்புனல் தெளிந்து நிறைந்த மணிக்குளம்!
நிழல்சேர் கரையில் நின்றுகொண் டிருந்தேன்.
புழுக்கமும் வியர்வையும் எழுப்பி என்னை
நலிவு செய்த நச்சு வெய்யில்,
வானி லிருந்து மண்ணிற் குதித்துத்
தேன்மலர்ச் சோலைச் செழுமை கடந்தென்
உளத்தையும் உயிரையும் பிளப்பது விந்தை!
குளத்தில் விழுந்து குளிக்கத் தொடங்கினேன்.
வெள்ளப் புனலும் கொள்ளிபோல் சுட்டது.

உழைப்புத் துன்பம்
காலைப் போதினைக் கனலால் பொசுக்கிச்
சோலையும் கடந்து சுடவந்த வெயில்
விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்.
எண்ணும் போதென் கண்ணின் எதிரில்
வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்
வந்து நின்று வணக்கம் செய்தனர்.
ஐயகோ நெஞ்சமே, இந்த ஆட்கள்
தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்?

வியர்வைக் கடலின் காட்சி
களைபோக்கு சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுல குழைப்பவர்க்குரிய தென்பதையே!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 2:59 pm)
பார்வை : 51


பிரபல கவிஞர்கள்

மேலே