பெண்ணுக்கு நீதி
கல்யாணம் ஆகாத பெண்ணே! - உன்
கதிதன்னை நீநிச் சயம் செய்க கண்ணே!
வல்லமை பேசியுன் வீட்டில் - பெண்
வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;
நல்ல விலை பேசுவார் - உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்
கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்;
வல்லி உனக்கொரு நீதி 'இந்த
வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்சவேண்டாம்
பெற்றவ ருக்கெஜ மானர் - எதிர்
பேசவொண் ணாதவர் ஊரினில் துஷ்டர்.
மற்றும் கடன் கொடுத்தோர்கள் - நல்ல
வழியென்று ஜாதியென் றேயுரைப் பார்கள்;
சுற்றத்திலே முதியோர்கள் - இவர்
சொற்படி உன்னைத் தொலைத்திடப் பார்ப்பார்,
கற்றவளே ஒன்று சொல்வேன் - 'உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!
தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில்
தள்ளியடைக்கப் படுங்குதி ரைக்கும்
கனைத்திட உத்தர வுண்டு - வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்;
கனைத்த உன் பெற்றோரைக் கேளே! - அவர்
கல்லொத்த நெஞ்சை யுன் கண்ணீரினாலே
நனைத்திடுவாய் அதன் மேலும் - அவர்
ஞாயம் தராவிடில் விடுதலை மேற்கொள்!
மாலைக் கடற்கரை யோரம் - நல்ல
வண்புனல் பாய்ந்திடும் மாநதிதீரம்
காலைக் கதிர் சிந்து சிற்றூர் - கண்
காட்சிகள், கூட்டங்கள், பந்தாடும் சாலை
வேலை ஒழிந்துள்ள நேரம் - நீ
விளையாடுவாய் தாவி விளையாடு மான்போல்!
கோலத்தினைக் கொய்வதுண்டோ? - பெண்கள்
கொய்யாப் பழக்கூட்டம்' என்றே உரைப்பாய்.