குழந்தை மணத்தின் கொடுமை

ஏழு வயதே எழிற்கருங் கண் மலர்!
ஒருதா மரைமுகம்! ஒருசிறு மணியிடை!
சுவைத் தறியாத சுவைதருங் கனிவாய்!
இவற்றை யுடைய இளம்பெண் - அவள்தான்,
கூவத்தெரியாக் குயிலின் குஞ்சு;
தாவாச் சிறுமான், மோவா அரும்பு!
தாலியறுத்துத் தந்தையின் வீட்டில்
இந்தச் சிறுமி யிருந்திடு கின்றாள்;
இவளது தந்தையும் மனைவியை யிழந்து
மறுதார மாய்ஓர் மங்கையை மணந்தான்.
புதுப்பெண் தானும் புதுமாப் பிளையும்
இரவையே விரும்பி ஏறுவர் கட்டிலில்!
பகலைப் போக்கப் பந்தா டிடுவர்!
இளந்தலைக் கைம்பெண் இவைகளைக் காண்பாள்!
தனியாய் ஒருநாள் தன் பாட்டியிடம்
தேம்பித் தேம்பி அழுத வண்ணம்
ஏழுவயதின் இளம்பெண் சொல்லுவாள்;
'என்னை விலக்கி என்சிறு தாயிடம்
தந்தை கொஞ்சுதல் தகுமோ?' தந்தை
'அவளை விரும்பி, அவள் தலை மீது
பூச்சூடுகின்றார்; புறக்கணித்தார் எனை!'
'தாமும் அவளும் தனியறை செல்வார்;
நான் ஏன் வெளியில் நாய்போற் கிடப்பது?'
'அவருக்கு நான் மகள்! அவர் எதிர் சென்றால்,
நீ போ! என்று புருவம் நெறிப்பதோ?'
பாட்டி மடியில் படுத்துப் புரண்டே
இவ்வாறு அழுதாள் இளம்பூங்கொடியாள்!
இந்நிலைக்கு இவ்வாறு அழுதாள் - இவளது
பின்நிலை எண்ணிப் பாட்டி பெரிதும்
அழுத கண்ணீர் வெள்ளம், அந்தக்
குழந்தை வாழ்நாளட் கொடுமையிலற் பெரிதே.


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:38 pm)
பார்வை : 21


பிரபல கவிஞர்கள்

மேலே