தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:43 pm)
பார்வை : 34


மேலே