எந்நாளோ

என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்விகற்றுப்
பன்னறும் கலைஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்,
உன்னத இமமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?

கைத்திறச் சித்திரங்கள்,
கணிதங்கள் வான நூற்கள்
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவியங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தகசாலை எங்கும்
புதுக்குநாள் எந்தநாளோ?

தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்தநாளோ,
ஆரிதைப் பகர்வார் இங்கே?

பார்த்தொழில் அனைத்தும் கொண்ட
பயன் தரும் ஆலைக்கூட்டம்
ஆர்த்திடக் கேட்பதென்றோ?
அணிபெறத் தமிழர்கூட்டம்
போர்த்தொழில் பயில்வதெண்ணிப்
புவியெலாம் நடுங்கிற்றென்ற
வார்த்தையைக் கேட்டு நெஞ்சு
மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள்கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்
கள்ளத்தால் நெருங்கொணாதே;
எனவையம் கலங்கக்கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும் நாள் எந்தநாளோ?

தறுக்கினாற் பிறதேசத்தார்
தமிழன்பால் - என் - நாட்டான்பால்
வெறுப்புறும் குற்றஞ்செய்தா
ராதலால் விரைந்தன்னாரை
நொறுக்கினார் முதுகெலும்பைத்
தமிழர்கள் என்றசேதி
குறித்தசொல்கேட் டின்பத்திற்
குதிக்கும் நாள் எந்தநாளோ?

நாட்டும்சீர்த் தமிழன் இந்த
நானில மாயம்கண்டு
காட்டிய வழியிற் சென்று
கதிபெற வேண்டும் என்றே
ஆட்டும்சுட் டுவிரல் கண்டே
டிற்று வையம் என்று
கேட்டுநான் இன்ப ஊற்றுக்
கேணியிற் குளிர்ப்பதெந்நாள்?

விண்ணிடை இரதம் ஊர்ந்து
மேதினி கலக்குதற்கும்
பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
பாரினை மயக்குதற்கும்
மண்ணிடை வாளையேந்திப்
பகைப்புலம் மாய்ப்பதற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
எனும்நிலை காண்பதென்றோ?

கண்களும் ஒளியும்போலக்
கவின் மலர் வாசம்போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடுதன்னில்.
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற்பாயப்
பருகுநாள் எந்தநாளோ?


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 3:42 pm)
பார்வை : 20


பிரபல கவிஞர்கள்

மேலே