இரை
மின்னும் செதில்களுடனும் துருத்திய விழிகளுடனும்
அலைகடல் கரையின் பொன்மணலில்
ஒற்றைக் கால் உந்திஉந்தி நீ துடித்துக்கொண்டிருக்கிறாய்
ஆகாயத்தில் விசையுடன் சுழலும் அவ்வேகத்திலேயே
என்னுடல் கணையால் அக்கரைபாய்ந்து
என் இரை உன்னைக் கொத்திப்போகும் தருணம் மீதில்
சலனம் கலைத்த பறவையாய் பறத்தலில் மிதக்கிறேன்
வானம் பூமி இடைவெளிப் பாய்ச்சல் பழக்கமெனக்கு
என்றாலும் கடைசிச் சுவாசமும் சீற விழிபிதுங்கக் காட்சிதரும்
பரிதாபமான இரையை ஏனோ நான் விரும்பவில்லை
நீர்ச்சுழலில் துள்ளியோடி நீந்தி நீ ஆர்ப்பரிக்க
சர்ரென்று பாய்ந்து உன்முதுகில் என் நரம்பிறக்கிக் கவ்வி
அம்பாய் வானேகும் என் கம்பீரத்தில்
நீர்ப்பரப்பில் நெளியும் என் பிம்பத்தைத்தான்
ரசிக்கிறேன் இன்னும் அதிகமாய்
ஆகாயத்தை முட்டிக் கிளைக்கும் ஒரு மரக்கிளையில்
என் கால்நகங்களுக்கிடையே உனை விருந்தென இருத்தி
எனை நோக்கும் உன் கண்களை அலகால் தோலுரித்து
நீ தரும் சுவையை உதாசீனப்படுத்தி
உன்னை இன்னுமொரு முறை உயிர்நீக்கி எறியலாம்
இன்னொரு பறவைக்கு இரையாய்