விடுதலை

நாடகம்)

அங்கம் 1

காட்சி 1

இடம் -- மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்.
நேரம் -- நடுப்பகல்.
காக்கை யரசன் -- (கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த
தெப்பமண்டபத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்துகொண்டு
சூர்யனை நோக்கிச் சொல்லுகிறான்: -- )

“எங்கோ வாழ்!
நீல மலைகள் நிரம்ப அழகியன.
வானம் அழகியது. வான்வெளி இனிது.
வான வெளியை மருவிய நின்னொளி
இனியவற்றுள் எல்லாம் இனிது.
‘எங்கே,’ ‘எங்கோ,’ எனவும்; அன்றி
‘கிலுகிலு கிலுகிலு’ எனவும்; ‘கிக்கீ;
கிக்கீ’ என்றும்; ‘கேக்க,’ ‘கேக்க’
‘கேட்க, கேட்க’ எனவும்; ‘கெக்கெக்கே’ --
‘குக்குக் குக்குக் குக்குக் குக்குக
குக்கூவே!’ என்றும்; ‘கீச்கீச், கீச்கீச்,’
‘கிசு, கிசு, கிசுகீச்’ என்றும்; ‘ரங்க, ரங்க’ --
என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும்
குயில்களும், கிளிகளும், குலவுபல ஜாதிப்
புட்களும் இனிய பூங்குர லுடையன.
எனினும்,
இத்தனையின்பத் தினிடையே, உயிர்க் குலத்தின்
உளத்தே மாத்திரம் இன்ப முறவில்லை.
இஃதென்னே! -- காக்கா! காக்கா; எங்கோவாழ்!”
இனதக் கேட்டு, மற்றப் பக்ஷிகளெல்லாம் கத்துகின்றன: --
“ஆம், ஆம், ஆமாம், ஆமாம். ஆமாமடா! ஆமாமடா! ஆமாம்.
எங்கோ வாழ். எங்கோ வாழ். நன்றாக உரைத்தாய். மனந்தான் சத்துரு.
வேறு நமக்குப் பகையே கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே
உட்பகையாக இருந்துகொண்டு, நம்மை வேரறுக்கிறது. அடுத்துக்
கெடுக்கிறது. மனந்தான் பகை.
அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள்.
அதை வேட்டையாடுவோம் வாருங்கள்.”

இரண்டாம் காட்சி
வானுலகம் -- இந்திர சபை

தேவேந்திரன் கொலுவீற்றிருக்கிறான்.
தேவ சேவகன்: -- தேவ தேவா!
இந்திரன்: -- சொல்.
தேவ சேவகன்: -- வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார்.
தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்.
இந்திரன்: -- வருக.
(நாரதர் பாடிக்கொண்டு வருகிறார்).
“நாராயண, நாராயண, நாராயண, ஹரி, ஹரி, நாராயண, நாராயண”
இந்திரன்: -- நாரதரே! நாராயணன் எங்கிருக்கிறான்?
நாரதர்: -- நீ அவனைப் பார்த்தது கிடையாதோ?
இந்திரன்: -- கிடையாது.
நாரதர்: -- ஸர்வ பூதங்களிலும் இருக்கிறான்.
இந்திரன்: -- நரகத்திலிருக்கிறானா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- துன்பத்தி லிருக்கிறானா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- மரணத்திலிருக்கிறானா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- உங்களுடைய ஸர்வ நாராயண சித்தாந் தத்தின் துணிவு யாது?
நாரதர்: -- எல்லா வஸ்துக்களும், எல்லா லோகங்களும், எல்லா நிலைமைகளும்,
எல்லாத் தன்மைகளும், எல்லா சக்திகளும், எல்லா ரூபங்களும்,
எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.
இந்திரன்: -- நீரும் கழுதையும் சமானந்தானா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- அமிருத பானமும், விஷபானமும் சமானமா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- சாதுவும், துஷ்டனும் சமானமா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- அசுரர்களும், தேவர்களும் சமானமா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- ஞானமும், அஞ்ஞானமும் சமானமா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- சுகமும், துக்கமும் சமானமா?
நாரதர்: -- ஆம்.
இந்திரன்: -- அதெப்படி?
நாரதர்: -- சர்வம் விஷ்ணுமயம் ஜகத் --
(பாடுகிறார்) நாராயண, நாராயண, நாராயண, நாராயண.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:50 pm)
பார்வை : 0


மேலே