வ(வி)சன கவிதை
பேருந்து நிலையமெலாம்
திரை எழும்பும் கூலியினம்
இடுப்பில் ஒன்றெனில் கைவிரல்
மடிப்பில் மற்றொன்று
தலையில் சுமடமர்ந்த
பயணப் பொருள் மூட்டை
தெற்கின் சக உதிரம்
தெங்கெண்ணெய்த் தலையொழுக
ஊர் பார்த்து வழியேகும்
உமையாளின் மணநாளில்
தேவர் கனம் சமன் செய்ய
தெற்கே வழி மறந்த
குடமுனியும் வடக்கேகும்
காலை அதிரக் கனத்த வேட்டொலியில்
வாணத்து வெளிச்சத்தில்
பட்டாசும் பலகாரமும் வாங்கும்
கை நகத்தில் கிரீஸ் மணக்கும்
தீபாவளிக் கனவுதனில்
தலையணையில் வாயொழுக்கி
அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும்
அறியாத மதலை இனம்
செந்தமிழர் முன்றில் தொறும்
காரிருள் கலையுமுனம்
வண்ணச் சுண்ணத்தில்
Happy DiWali
நடுவில் பூவாணம்
அரை நூற்றாண்டு ஆயிற்று
எரியாது அணைந்து ஒழிந்த
உதிரி வெடி பொறுக்கி
உல்லாச நடை நடந்து
ஈழத்தில் செத்தொழிந்த
எம்மினத்துப் பொடியர்க்கு
எத்தனையாவது திவசம் இது?
மீனுக்குள் கடல் கண்ட
தோழன் ‘ பாதசாரி ‘
துக்கத்தில் சொன்னதிது
காலத்தின் சுவை என்றும்
கண்ணீரின் உப்பு.