காமம் காமம் என்ப

காரைக்கால் அம்மையின்
தடத்தில் நடக்கப்
பேயுருவல்ல நம்முரு
பன்னாட்டுப் பித்துரு

காமம் கனிந்தது அம்மை தேடல்
காமம் நனைந்தது நமது நாடல்

காமம் என்பது
செம்பியன் ஏற்றை
கருமுக மந்தி
இன்று நமக்கு

பொருந்தாக் காமம்
போதாக் காமம்
திருந்தாக் காமம்
தீவிரக் காமம்- அன்பு
கருதாக் காமம்
காசுக் காமம்
இசைந்த காமம்- துன்பம்
மிசைந்த காமம்
வலிந்த காமம்
மலிந்த காமம்
வாய்ச்சொல் காமம்
சைகைக் காமம்
நயனக் காமம்
குறும் செய்திக் காமம்
மின் அஞ்சல் காமம்
வலைத் தளக் காமம்
நாய்க் காமம்
கழுதைக் காமம்
கோழிக் காமம்
இருநொடிக் காமம்
முறைபடக் காமம்
முறைதிரி காமம்…

எனப்பல பம்பி
யாங்கணும் நிறைந்து
கோச்செங்கணான் களிற்று வாரிசு
நகரத் தெருக்களில் யாசிப்பது போல்
தலையின் இழிந்த மயிரென
யாண்டும்
காமம் இரத்தல்
இழிந்தது கண்பீர்!

காமம் என்பது
மோகம் , விருப்பம் ,
பற்று , பக்தி ,
நட்பு , அன்பு ,
காதல் என்மனார் புலவர்

காமம் பேயும் அன்று
நோயும் அன்று
காமம் விருந்தென உரைத்தான்
குறுந்தொகைப் புலவன்
மிளைப்பெருங் கந்தன்

காமம் எனப்படுவது
பீச்சொல் இல்லை!

பொன் , பொருள் , பதவி ,
சலுகை , பரிந்துரை ,
கொடுக்கல் வாங்கல்
எத்தரப்பிலும்
இல்லாக் காமம்
இயற்கையானது , எளிமையானது!

பேரின்பம் ஓதிச்
சிற்றின்பம் காட்டும்
ஆன்ம விதூஷக
வெற்றுரை விலக்கி ,
மலரினும் மெல்லிய
காமம் முயலுமின் !
கொள்மின் !
கொடுமின் !


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:29 pm)
பார்வை : 0


மேலே