எடை சுமந்து - மண்ணுள்ளிப் பாம்பு

தந்த பிரேமில் தளிர் கண்ணாடி
இளைப்புக்காரனின் இடுப்பில் இருக்கும்
புல்லாங்குழலாய்
இரண்டு பேனா
தங்கத்தில் கோர்த்த கைக்கடிகாரம்
ஆனை வால் முடிகள் அடுக்கடுக்காய் சுற்றியோ
காவல் நாயின் சங்கிலி போலவோ
ஆறோ எட்டோ பவுனில்
இன்னொரு கையில்
பிறந்த வீட்டன் பட்டை மோதிரம்
பொண்டாட்டி வீட்டின் முட்டை மோதிரம்
எட்டில் சனியும் நாலில் ராகுவும்
விளைக்கும் நாசம் விரைவாய் போக
பஞ்சபூத பொருத்தமும்
பஞ்சேந்த்திரிய அழுத்தமும் பார்த்து
முத்தோ பவிழமோ முரணிய கற்களோ
பதித்ததொன்று
தலைவர் படமும் கொடியும் சின்னமும்
கொள்கையும் தாங்கிய
சின்னக் கேடயம் போல ஒன்று
நீலகண்டனின் மேனியில் புரளும்
நீள சர்ப்பமாய் சங்கிலியொன்று
பொன்னரைஞாணை
ஆடைக்கு மேலே
அணிதலும் ஆகும்
சுமக்க இல்லா
கருப்பு மனிதர்
காட்டி திரியுது
வெளியே சுமந்து


கவிஞர் : நாஞ்சில் நாடன்(2-May-14, 2:26 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே