மலர்ச்சி

தந்தி வரும் முத்துமொழித் தந்தையென முத்தமிடும்
சித்திரம் போல் பூஞ்சிவப்பு சிந்தி நன்ற -அத்தைமகள்
பூப்பெய்தி விட்டாளாம் ! பூமகளின் காலடியில்
பூப்பெய்தேன் என்ன வியப் பு...

பொன்னரைத்துப் பூசிவைத்த பூவை எனையினிமேல்
கண்களைத்துப் போகட்டும் காண்பாளா ? - மண்மேல்
தினைகாட்டு மானாய்த் திரிந்தாளே ஆமாம்
எனைக்கேட்டா பூத்தாள் இவள் ???

பாவடை தன்னில் பருவ நயம் சிந்திவரத்
தாவமால் தாவும் தளிர்சிட்டு -பூவாகி
ஆடிக் குலுங்கி அடையாளம் மாறியின்றி
மூடி மறைப்பாள் முகம் .

பனியுலர்த்தும் பால்மேனி பட்டாடைக் குள்ளே
கனிவனத்துத் தேன் நிலவாய் காயும் - மஞ்சளெனும்
வண்ணத்தில் புத்து வடிவம் பொலிய இனிக்
கன்னத்தில் மின்னும் கனி...

கண்திறந்த செவ்விளநீர் காலளந்து மண்ணளக்கும்
பண்ணிருக்கும் பார்வை பனிவடிக்கும் - என் விழியைக்
காணத் துடிப்பிருந்தும் காதல் அணைப்பிருந்தும்
நாணம் நடுக்கும் நலிந்து ...

தேனளந்து வைத்திருக்கும் செவ்விதழால் என்னெஞ்ச
வானளந்த வண்ணநிலா வந்து நின்றால் - நானழைத்துக்
கிள்ளாமல் கிள்ளி மிக்க கேலிசெய்வேன் என்றினைத்துச்
சொல்லாமல் போகும் சுடர்....

அத்தானை வெல்லவரும் அரும்புவிழி வாளென்னும்
அத்-தானை கொண்டுதினம் ஆடவைப்பாள்-முத்துபோல்
செல்ல விளையாட்டுச் செய்தவளின் கன்னிமுகம்
மெல்லச் சிவக்கும் மிளிர்ந்து..

ஈரெட்டு புவயதும் இன்னும் முடியவில்லை
சீரெட்டும் சிந்து சிரிப்புருவம் - காரெட்டும்
கூந்தலிலே பாட்டெழுதிக் கொள்ளென்று சொன்னபடி
பூந்தேனில் நின்றதம்மா பூத்து

என்றன் படத்தை இமைக்காமல் பார்த்தனைத்துத்
தென்றல் விழிக்குள்ளே தேங்கிவரும் - அன்பொழுக
என்னத்தான் வேண்டும் இனியென்பாள் நானவளை
எண்ணத்தான் வேண்டும் இனி...!!!


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 12:27 pm)
பார்வை : 0


மேலே