துணை நின்றாள் தோழி!

*"சிறுநனி வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே!"

(ஐங்குறுநூறு: பாடல்: 180
பாடியவர்: அம்மூவனார்)

பொருள் விளக்கம்:

சிறுநனி வரைந்தனை கொண்மோ= மிகக் குறுகிய காலத்திற்குள் உனக்கு உரியதாக்கிக் கொள்க.
பெருநீர்= கடல், பறைதபு முதுகுருகு=பறக்க இயலாத கிழப்பறவை. வலைவர்=மீனவர்
வல்சி=உணவு

தளிர் என்றால் கொழுந்தன்றோ!
தடம் என்றால் வழியன்றோ!
அஃதேபோல்
தலைவன் என்று துணைவனையும்
தலைவி என்று துணைவியையும் - பழந்
தமிழ் நூல்கள் குறிப்பது வழக்கமன்றோ!

களவு வழியில் தலைவன் தலைவியின் இன்பக்
காதல் அரும்பிடும் போதெல்லாம் - தக்க
உளவுகள் கூறிஅதனை மலர்ந்திடச் செய்வர்
உயிர்த் தோழனும் தோழியும் என்று;
உரைத்திடும் இலக்கியம் தமிழனுக்குண்டு - தலை
நரைத்திடு கிழவரும் நன்றாய் அதனைச் சுவைப்பதுமுண்டு!

ஐங்குறு நூறு எனும்
பைந்தமிழ்ப்பனுவலில்
நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லையினும் - மழை
பெய்தல் பொய்த்த பாலையிலும் - பிணைந்த காதலர்
எய்திடும் இன்ப நிகழ்ச்சிகளை - மாலையில்
கொய்திடும் மலர்களென வழங்குவர் புலவர்!

ஓரம்போகியார் எனும் ஒரு கவிஞர்,
காரம்போகாக் கடுகெனத் தருவார் மருதப்பாடல்!
குறிஞ்சி நிலத்தில் கூவுகின்ற - காதல்
குயிலினத்தின் குன்றா அன்பைக்
கவிக்கோமான் கபிலர் என்பார் - இப்

புவிக்கோர் விருந்தாய்ப் படைத்திடுவார்!
ஆயனார் வாழும் முல்லை நிலத்தில்
ஆவிநிகர்க் காதலர் ஆடி மகிழ்வதை
பேயனார் எனும் கவிக்கோ - தமிழர்
பெருமைக்கோர் சான்றாகப் பேசிடுவார்!

அம்மூவனார் எனும் புலவரோ
அலை தழுவும் நெய்தல் நிலத்தில - காதல்
கலைபயில்வோர் களித்திடும் காட்சி
கவினுற வரைந்திடுவார்!

பாலை நிலத்திலும் - காதல்
பண்பாடிடும் பறவைகள் உண்டென்று - அவர்தம்
பிரிவின் வேதனை உரைத்திடுவார்;
பரிவுடனே ஓதலாந்தையார் எனும் புலவர்!

ஐந்து வகை நிலம் வாழும் அறிவு ஆறறிவு மாந்தர்கள்,
ஆய்ந்து தெளியும் அறிவிலா ஊர்வன, நடப்பன, பறப்பன,
அடவிகள், அருவிகள், அழகுறு சோலைகள்,
அடுக்கடுக்காய் அமைந்த மலைத்தொடர்கள்,

அலைக்கரத்தால் தாலாட்டும் கடற்பரப்பு,
அங்கெல்லாம் உயிர் இனத்தின் வாழ்க்கை முறை,
அத்தனையும் உற்று நோக்கி - தமிழில்
முத்தனைய பாடல்கள் ஐநூறு தந்திட்டார்!
சத்துநிறை அகவாழ்வின் அமுத ஊற்றுக்களாம் - அவற்றுள்;
முதலில் ஒரு பாட்டுக்குள்
மூழ்கித் திளைத்திடுவோம்!

நெய்தல் நிலத்தில்

ஓலமிடும் கடலோரம்
கோலம் செய் பொன்மேனிக்
கோதையொருத்தி;
மணல் மேட்டில் சாய்ந்தவாறு - மேற்கின்
தணல் வண்ணம் பார்த்திருந்தாள்!

அணிமலர்ப் புன்னையின் அருகேயிருந்து - அவள்
பிணிதீர்க்கும் மருத்துவன் வந்து சேர்ந்தான்!

"வந்தீரோ மருத்துவரே" எனக்குதித்து
"தந்திடுவீர் மருந்தென்று" தலைசாய்த்தாள் அவன் தோளில்!

"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்க்கு
இருவரும்தான் ஆட்பட்டுத் தவிக்கின்றோம் - அதனாலே;
ஒருவருக்கொருவர் மருந்து உதவி தவிர்க்கலாம் நோய்," என்று
தழுவினான் தங்கச் சிலையை!

விரிந்து பரந்த கடற்கரை மெத்தையில்
விழுந்தனர், புரண்டனர், எழுந்தனர், மகிழ்ந்தனர்!

"விழியில் என்ன நீர்? கடல் மணல் பட்டதாலா கண்ணே?" - என்று
மொழியில் ஒரு கொஞ்சல் கலந்து ஊதிட வந்தவனைத் தடுத்துவிட்டு
"ஊதுகின்றீர் என் கண்ணில்; நன்றி! நன்றி! ஆனால் நான்
ஓதுகின்றேன் உமது காதில் பல நாளாய்!
அதைக் கேட்காமல் நீர் இருப்பதால்தான்;
அருவிபோல் நீர் என் விழியில் அறிக" என்றாள்!

"களவியல் விடுத்திட வேண்டும்
கற்பியல் தொடங்கிட வேண்டும் - உன்
உளமது மகிழ உடனே நம் மணம்
உவகை பொங்கிட நட ந்திட வேண்டும்
மதுவூறும் இதழ்ப்பூவே! மணியே! மானே!
இதுதானே உன் ஆவல்?" எனக் கேட்டான்.

குனிந்து தலையசைத்தாள் "ஆம்" என்று,
குங்குமமாய்க் கன்னம் சிவக்க நாணமுற்று;

கோடு கிழித்துக் கால் பெருவிரலால்
கோலம் போட்டாள் கொள்ளை இன்பம் நெஞ்சில் குவிய!

வீணையின் குடம்போல விம்மிப் புடைத்த அவள் பின்னழகை
விரகதாப உணர்வோடு தட்டிக் கொடுத்துத் தலைவனும்;
"வீணாக வருந்தாதே கண்ணே!
விண்ணு‘றும் சந்திரனின் சாட்சியாகச் சொல்வேன்;
விரைவில் உனைக் கரம் பிடித்து மணப்பேன்
விடுதுயரம்! இடையில் சில நாட்கள்;
இவ்வுலகின் துன்பப் பகுதியை - இருவருமே
எட்டிப்பாராமல் இன்பத்தில் கலந்திடுவோம்!
தலையில் ஒரு பலாக்கனி சுமந்து கயிற்றின்மேல்
நிலை தவறாமல் நடப்பதுதான் இல்வாழ்வு!
உலையில் இட்ட சோறுபோல் கொதித்தல் நலமா? - அமைதி
அலையில் ஆடும் படகுபோல் மிதத்தல் நலமா? - அதனாலே
கலையழகே! என் கலாபமே! கண்மணியே!
கணவன் மனைவி ஆவதற்குச் சற்றுக் காத்திருப்போம்! அதுவரையில்
காதல் எல்லை எதுவென்று - அந்தக்
கடலின் ஆழம் கண்டறிவோம்!" என்றுரைத்தான்.

அவளோ;
அன்பன் கரம்பட்டுச் சிலிர்த்துப்போய்,
என்புதோல் நரம்பனைத்தும் சூடேறி;
"மன்பதைக்கழகா! உந்தன் மனம்போல் நடக்கட்டும்" - என்று
தன்புலன் அத்தனையும் அவன் தாளடி சேர்த்து நின்றாள்!

சுருண்டு நெளிந்த அவள் கூந்தலைக் கோதியவாறு - அவனும்;
"சுகமே! சுவையே! பழச்சுளையே! பாலமுதே! - அதோ
இருண்டு கிடக்கும் மண்டபம் அழைக்குது! என்
இதயமே வா; உடல் இன்பத்தைப் பருகலாம்" என்றான்!

மருண்டது மானின் விழி அக்கணம் எனினும் - மறுகணம் அவன்
உருண்டு திரண்ட தோளிலே, உரியவள் தொத்திக் கொண்டாள்!

நிலவின் ஒளிகூட நுழையாத
மண்டபத்தில் நுழைவதற்குள்
நில்லுங்கள் என்றோர் ஒலி! - அவர்களின்
நேரம் தெரியாமல் தடுத்தது பாபம்!

கோழியொன்று குஞ்சுதனை - வல்லூறு
கொல்லாமல் காப்பது போல்; அவளின்
தோழி வந்தாள்! தொடாதே அந்தத்
தோகையை என்று எதிர்நின்றாள்!

தேன் குடிக்கப் போகின்ற வண்டை - வீணே
ஏன் தடுக்கின்றாய்? என்று
விழியாலே கேட்டான் - "இந்தப்
பழி மிகப் பொல்லாது" என்றான்!

"குன்றெடுக்கும் நெடுந்தோள் கொண்டவனே! - பகையை
வென்றெடுக்கும் ஆற்றல் பெற்றவனே!
குறையொன்றும் காணவில்லை உமது அன்பில்!
நிறை நெஞ்ச வாழ்த்து உண்டு ஏற்றிடுக! - எனினும்;
மரபொன்று உண்டல்லவோ தமிழர்க்கு? அதை நீவிர்
மறந்துவிடல் கண்டல்லவோ நினைவூட்டுகின்றேன்!

மணம் புரிந்து மனையறம் காணாமல் - கடற்கரை
மணல்மீதும் மண்டபத்துள்ளம் காதல் கீதம்
மறைவாக இசைத்து மகிழ்வதற்கு - இந்த
மகளைப் பெற்றோர் நீண்ட நாள் ஒப்பமாட்டார்!
இந்த ஊருக்குத் தலைவன்தானே நீர்-
வெந்த உளத்தோடு ஒரு சேதி சொல்கின்றேன் - கேட்டிடுக!

இந்தத் தொண்டித்துறையில்

உடல் வியர்க்க உழைப்பைச் சிந்தி உயிரைப் பணயம் வைத்து
கடல் மீது சென்று மீனவர் பிடித்த கொழுத்த மீனை
பறப்பதற்குச் சிறகில் பலமில்லா கொக்கொன்று
பறிப்பதற்குக் காத்திருக்கும் காட்சிதனைக் கண்டிலையோ

அதுபோல

பதுமைபோல் திகழ்கின்ற இத் தலைமகளை
வதுவை நீ புரிவதற்கு நாள் கழித்ததால்
முதுமை நிறைப் பெரியோர்கள் - கொக்கனையா"
முந்திக்கொண்டு வருகின்றார் இவளை மணமுடிக்க!
இலவு காத்த கிளிபோலாக உனக்கு விருப்பமெனில்;
இன்னும் பலநாள் தள்ளிப்போடு மணவிழாவை!
இல்லையெனில் இன்றைக்கே - இந்த
முல்லையினை மணப்பதற்கு நாள் குறித்திடுக!"

தோழி இதைச் சொன்னவுடன் - திடுக்கிட்டு - அவன்
"ஆழிமுத்தை அணிவதற்கு அட்டியுண்டோ?
வாழிநீ தோழி! வாழி! வாழியவே! இனி
நாழிகை நேரம் பார்ப்பதற்கு எண்ணமில்லை;
வாளைமீனை; வட்டமிடும் கிழப்பறவைக்கு இரையாக்க மாட்டேன்!
நாளையே திருமணம்; நடக்கட்டும் ஏற்பாடெ"ன்றான்!

உண்மையைச் சொல்லாமற் சொல்லி
உவமையால் விளக்கம் தந்த
வண்மை நிறை தோழியின் திறம் வியந்து
வளமிகு பாடல் அம்மூவனார் வழங்கினார்!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 11:39 pm)
பார்வை : 94


பிரபல கவிஞர்கள்

மேலே