சுமந்தவள் சுமந்த சோகம்!

*"வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே."

(புறநானூறு: பாடல்:286
பாடியவர்:ஒளவையார்)

பொருள் விளக்கம்:

வெள்யாட்டுச் செச்சை= வெள்ளாட்டுக் கிடாய்
மண்டை= தேறல் எனும் மது
கால்கழி கட்டில்= காலில்லாத கட்டிலெனப்படும் பாடை.
தூவெள் அறுவை= (உடலை மூடுகின்ற) தூய வெள்ளைத் துணி.

பனிமுட்டை அடை காக்கும்
பசும்புல்லின் தலைமீது
மணித் தேர் அசைவது போல்
மாதொருத்தி நடந்து வந்தாள்
கனித் தமிழ்ச் சொல் உதிர்க்கும் புலமை மிக்காள்
காக்கைப் பாடினி பொன்முடியார்க்குத் தமிழில் அவள் அக்காள்
அதியமான் நெடுமானஞ்சி - வேள்பாரி வள்ளல் நாடன்
சேரமான் மாவெண் கோவன்,
கானப்பேர் தந்த வழுதி - மற்றும்
சோழனாம் பெருநற்கிள்ளி
ஆகியோர் புகழைப்பாடித் தமிழுக்கு
அணி பல பூட்டி நின்ற

அறிவொளி ஒளவை நல்லாள்!
காலைக் கதிரவன் போல் கை சிவக்கக் கொடை வழங்கும்
காவலர்கள் வாழ்ந்திருந்த தமிழ்நாடு!
ஓலை கொண்டொருவன் போர் என்று வந்துவிட்டால்
மாலை சூடுகின்ற வேளையென்றும் பாராமல்
தோளைத் தொத்துகின்ற பெண்கிளியைப் புறம் விடுத்து,
வாளைக் கூரேற்றி வான் நோக்கி நிமிர்கின்ற வீரமறவர்களின் தாய்வீடு

பாலை, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதமென்று
நிலம் வகுத்து வாழ்கின்ற தமிழரிடை
சோலைப் பூவினம் போல் தமிழ்க் கவிதை மலரவைத்தாள்.
தாயகத்துக் கற்புநிறை பிறழாத
காதல் சொன்னாள் - களம் சென்றார் வீரம் சொன்னாள்.
களத்தில்,
சாதல் இன்னே வரட்டுமென்று சென்றுவிட்ட தலைமகனும்
சந்தனத்து கட்டை போல மணக்கட்டும் இலக்கியத்தில் எனக் கூறிப்
பாதம்முதல் உச்சிவரை குளிர்கின்ற தாய்க்குலத்தை
எண்ணியெண்ணிப் பெருமை கொண்டாள், தன்
பூவடிகள் புல்மீது அழுந்தியதால் பனித்துளிகள் அழிந்துவிடும்.
போரடியில் நெல்மணி போல் பகைவர்களின் சிரம் வீழும்
அமர்க்களத்தில்!

இதை நினைத்து,
நடக்கின்றாள் ஒளவையம்மை!
நாமணக்கும் தமிழம்மை! அறிவம்மை! அழகம்மை!

காலூன்றிப் பனியொற்றி வருகின்ற தாயின் முன்
கோலூன்றிப் பிறிதொரு தாய் வந்து நின்றாள்.

"அடி! தும்பை மலர் முடிதாங்கி!
துவண்டு விட்ட காலிரண்டும் வாழைத் தண்டாய்க்
குளிர்ந்து வரும் நேரத்தில நீ ஏன் வந்தாய்?
விற்புருவம் என்றுன் ஆளன் அழைத்திட்ட காலம்போய்
வில்லுருவம் முதுகில் பெற்ற இள நங்காய்!
விழியிரண்டும் வேலென்றார் அன்று;
வழி இரண்டு போனதென்று கோல்கொண்டாய் இன்று!
தமிழ்நாட்டு முத்தெல்லாம் தீர்ந்ததென்று பல் கழற்றிப்
பிற நாட்டு வாணிபத்தைச் செய்தவளே!
எங்கெழுந்தாய்? ஏன் பதைப்பு?
என்ன வாட்டம்?" எனக் கேட்டுக்
குறும்பு செய்தாள் ஒளவையம்மை!

"வேலி போட முடியாது இளமைக்கென்று தெரிந்த பின்னும்
கேலி பேசும் உன் போக்கு புரியவில்லை"
என மறித்து அந்தத் தாய் பேசலானாள்:-

"புண்பட்ட என்னகத்தில் புலமைத் தாயே உந்தன் கேலி,
பண்பட்ட தமிழ் மருந்தாய்ப் பாய்வதை நான் உணருகின்றேன்.
கண்கெட்ட கிழவி எந்தன் கரம்தொட்டு வணங்கிச் சென்ற
காளையை நான் மறக்கவில்லை.
மண்முட்டி எழுந்து நிற்கும் மாங்கன்றின் தளிர்தான் மேனி.
பொன்கொட்டிக் கொடுத்தாலும் வளையாத மனவலிமை
புலிக்குட்டி விளையாடும் அவன் மடியில்!
அந்த மகன் ஆசைமகன் அணிவகுத்தான்,
சொந்த மண்ணின் நலங்காக்கப் பணி வகுத்தான்!"

முடிக்கவில்லை முதியவளும்;
பொறுக்கவில்லை ஒளவைக்குக்
குறுக்கிட்டாள்.
"களம் சென்ற மகன் வீரம் புகழ்ந்து கூறிக்
கண்கலங்காத் தாய் வீரம் காட்டுதலே தமிழர் மரபு!
முதியவளே! மறவர் குல வழக்கிற்குப்
புதியவளாய் இருக்கின்றாய்! - வியக்கின்றேன்" என்றாள்.

"முழுதும் கேள் பெருமாட்டி!
பழுதொன்றும் காணமாட்டாய் என் நிலையில்!
அழுதழுது என் விழிகள் வீங்ககியதை மறுக்கவில்லை
பொழுதெல்லாம் கவலையினால் புலம்புவது பொய்யல்ல!
ஏனென்று தெரிந்து கொள்வாய்
நானொன்றும் மறைக்கவில்லை!"

"சொல்" என்றாள் ஒளவை
சொன்னாள் அவள்.
"கொற்றக் குடை சாயாத கொடித்தேர் மன்னர்
கற்றறிந்த பாவாணர் கடமைமிகு மாவீரர்
மற்றவர்க்கும் பெருந்தலைவர் அறிவாய் நன்று
அவர் படையில் இருக்கின்றோர் பல்லோர் வீரர்
ஆட்டுக்கடா அணிவகுத்துச் செல்வது போல்
அரசன் பின் நடப்பதற்குத் தயங்க மாட்டார்.
ஆயிரம் பேர் மன்னர்க்குப் பின்னால் இருந்தும்
அவர் மட்டும் என் மகன்பால் அளவற்ற அன்பு கொண்டார்.
போர்முனையில் ஓய்வெடுத்துக் கிடக்கும்போது
"தேறல்" என்னும் உற்சாகத் சாறுதனைத் திறல்மறவர்
அருந்துதற்குத் திரண்டு நிற்பார்.
அப்போது மன்னரவர் என்மகனை அருகழைத்து
அனைவரினும் அதிகபானம் அளித்து மகிழ்வார்.
என் வாட்டம் இப்போது கேட்பாயம்மா!
என்புகளைத் தெப்பமாக்கி நரி மிதக்கும் போர்க்களத்தில்
தலையுருட்டிப் பந்தாடும் பறவையினம்!
அத்தலையில ஒரு தலையாய் என்மகன் தலையும்
இருந்தாலன்றோ இறைவனளித்த தேறலுக்கும் பெருமையுண்டு
மன்னன் அன்பை மிகையாய்ப் பெற்றான்
மண்டையில் தேறலும் அதிகம் பெற்றான்
மாண்டனன் போரில்; புகழ்
பூண்டனன் எனும் காட்சி
காண்டிடல் அரிதோ எனக் கலங்கினேன் அம்மா!

தவறா?" என்றாள்.
அந்தத் தாயாக நான் இல்லையே என்று
அகமிக நொந்தாள் ஒளவைப் பிராட்டி!


கவிஞர் : கருணாநிதி(18-Mar-11, 11:38 pm)
பார்வை : 91


மேலே