தாதாபாய் நவுரோஜி

முன்னாளில் இராமபிரான் கோதமனா
தியபுதல்வர் முறையி னீன்று
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்
தியஎமது பரத கண்ட
மின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப்
பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர்தவிர்ப்பான் முயல்வர்சில
மக்களவ ரடிகள் சூழ்வாம்.
1

அவ்வறிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம்
மைந்தன் தன் அன்னை கண்ணீர்
எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றேலென் உயிர்துடைப்பேன் என்னப் போந்து
யௌவனநாள் முதற்கொடுதான் எண்பதின்மேல் வயதுற்ற வின்று காறும்
செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி
யானுழைப்புத் தீர்த லில்லான்.
2

கல்வியைப்போல் அறிவும் அறிவினைப்போலக் கருணையும் அக் கருணை போலப்
பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு
நிகரின்றிப் படைத்த வீரன்
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்
அனஅதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கன்றித் தனக்குழையாத் துறவி யாவோன்.
3

மாதா வாய் விட்டலற அதைச்சிறிதும்
மதியாதே வாணாள் போக்குந்
தீதாவார் வரினுமவர்க் கினியசொலி
நன்குணர்த்துஞ் செவ்வி யாளன்
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே
உண்மை நெறி விரிப்போனன் எங்கள்
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்
நவுரோஜி சரணம் வாழ்க!
4

எண்பஃதாண் டிருந்தவன் இனிப்பல்லாண்டு இந்தெம்மை இனிது காக்க!
பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந்
துக! எமது பரத நாட்டுப்
பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி
போற்புதல்வர் பிறந்து வாழ்க!
விண்புல்லு மீன்களென அவனன்னார்
எவ்வயினும் மிகுக மன்னோ.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 5:03 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே