பிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை

பிரார்த்தனை நேரங்களில்
தரிசிக்கிறேன்
உன்னை.

உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
பறவைகளாகி உயரப்
பறக்கின்றன என்னிலிருந்து
முற்றும் அற்றுப் போய்விடுமோ
என் கூடென்று
ஓடுடைத்து வெளி வருகின்றன
இன்னும் பறவைகள்.

ஓர் ஏரியின் கரையில்
நின்று
நீர்ச்சலனத்தை வரைகிறேன்
எதிலும் பெறமுடியாத
இசையின் வசீகரிப்பில்
கொஞ்சம்
கொஞ்சமாய்
தெளிகிறது உன் முகம்.

அவைகளின் எத்தனிப்பில்
சிதைந்து முடிகின்றன
நம் காதலுக்கான சொல்லாடல்கள்
சொற்களுக்கு அப்பாற்பட்ட
ஒன்றினை
தேடிக்கொண்டிருக்கிறேன்
தூரப் பறக்கும்
அந்த பறவையின் சிறகில்.

எல்லாவிதமான ஓசைகளிலிருந்தும்
பிரித்தறிகிறேன் உன்னை
மழை
குயில்
காற்று
சப்தம் எழுப்பும் எவையும்
தோற்றே போகின்றன
அழகிய உன் ஒலி முன்

சாரல் வாய்க்காத என் மேனியெங்கும்
முளைத்திருக்கின்றன செவிகள்
உன் ஒலியதிர்வுகளுக்காய்

ஒரு நிர்ணயப் பொழுதில்
அவிழத் தொடங்கும் மேகங்களை
அல்லது மொட்டுகளை
அறிமுகப்படுத்துவேன் உனக்கு.

இடைவெளிகளின்
ஆழத்தைப் பெயர்க்க முடியாத
என் கைகளுக்கும்
நழுவிப்போய் தவறும்
உன் இருப்புக்கும்
எதனாலோ
தெரிகிறது
நாம் மூடிவைத்திருக்கிற
காதலின் வாசனை.


கவிஞர் : யாழன் ஆதி(2-Nov-11, 5:21 pm)
பார்வை : 81


மேலே