தமிழ் கவிஞர்கள்
>>
யாழன் ஆதி
>>
மௌனத்தின் கூர்மை
மௌனத்தின் கூர்மை
மௌனத்தின் கூர்மையை
அறியாத உன் எத்தனிப்பு
படபடக்கும் ஒரு பட்டத்தைப் போன்றது
காற்றின் கைகள் கிழிக்கலாம் அதை.
வெவ்வேறாய் காய்ந்த குளங்களில்
ஒன்றாய் குவிகிறது
சூரிய ஒளி.
இரவின் குளிரை ஒப்படைத்துவிட்டு
செல்கிறேன்
என் கவிதைக்கான எழுத்துக்களை
நட்சத்திரங்களிலிருந்து பெறுகிறாய் நீ
இருப்பினும் சந்திப் பிழைகளைப் பற்றி
கவலைப்படுகிறார்கள் வாசகர்கள்
எத்தனை வடிவங்களில் திசை மாறுகிறது
வாழ்க்கை
நீ கொண்டுவந்த தண்ணீரைப் போலவே.
உனக்குத் தெரியாத எனக்கும்
எனக்குத் தெரிந்த உனக்கும்
என்ன இருக்கிறது
இடையில் இந்த இடைவெளியைத்தவிர.
கிளாடிக்கு சொல்வதற்குமுன்
ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்
அதிக உயரமில்லாத இந்த மலைக்குன்றின்
பெயரையும்
என் அன்பினையும்.