அம்மா

போர் நாட்களிலும் கதவடையா நம்
காட்டுவழி வீட்டின் வனதேவதையே
வாழிய அம்மா.
உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து
அன்றுநான் நாட்டிய விதைகள்
வானளாவத் தோகை விரித்த
முன்றிலில் நின்று எனை நினைத்தாயா
தும்மினேன் அம்மா.
அன்றி என்னை வடதுருவத்தில்
மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

அம்மா
அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்
நம் முற்றத்து மரங்களில்
மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?
தம்பி எழுதினான்.
வலியது அம்மா நம்மண்.
கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்
வானில் ஒலித்த போதெலாம்
உயிர் நடுங்கினையாம்.
நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

இருளர் சிறுமிகள்
மேற்க்குத் தொடர்ச்சி மலையே அதிர
நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்
கன்னிமாங்கனி வாடையில் வந்த
கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற
கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே
எங்கள் ஆற்றை எங்கள் காட்டை
உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை
உன்னை வந்து பார்க்கலையாமே.
போகட்டும் விடம்மா.
அவனும் அவனது
பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல
உன்னைக் காக்க
யானையின் மதநீர் உண்டு செளித்த நம்
காடும் உளதே


கவிஞர் : வ. ஐ. ச. ஜெயபாலன்(3-May-14, 5:31 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே