கண்காட்சி

வீட்டின் கூரை மீது விரிந்த வேப்பமரம்
தங்க நிறப்பழங்கள் சொரிய
கோடைப்பகலில் உன்வீடு தீச்சட்டியாய் கனன்றது

அறைகளின் சுவர்களில் உலர்ந்த பூக்களென
பட்டாம்பூச்சிகள் ஒட்டியிருந்த வண்ணம் காட்டி
பரவசம் கண்டாய்
நிழலின் தோகைகள் இருளென படர்ந்து
தாபங்கள் எழுந்த வேளை
தனிமையை நீருற்றி வளர்த்த உன் கண்கள்
வேகமாய் இன்னோர் அறைக்கு வாசல் திறந்தன

அறைகள் பெருகி
தாழுடன் தவிப்புடன் இறுகியிருந்தன
வீசும் வெக்கையை குயிலின் பூக்கள் பாடி ஆற்றின
கிளைகளின் பாதையில் பந்தயம் வென்ற
அணில்களின் சீழ்க்கைகள் தனிமையைக் களைத்தன
வீட்டின் அழகை நீ வியக்கும் போது
இரும்புக்குறி தீயாகச் சிவந்து
உடலின் தசைநார் புடைத்து எழுந்தன

வெக்கை வீறெடுத்திருக்க வீடு எப்படி என்றாய்
காதலியின் யோனியை கண் காட்சி ஆக்கியவனே!
வீடாகும் முன்னர் அது ஒரு பெருங்காடு
திக்குகளாய் விரிந்த இறக்கைகளுடன்
நாங்கள் வெறியாற்றிய குளிர் வனம் என்றேன்

உன்மீதே வழிந்திருந்த தோல்வியின்
திரவத்தைத் துடைத்துக்கொண்டாய்

வேம்பின் கவனம் நிழல் விரிந்த
பாறைகளாலான மொட்டை மாடியில்
நினைவுகளின் விசிறி அசைந்து
அவ்விடம் குளிர்ந்தது
வேப்பம்பூக்கள் ஒன்றிரண்டாய் உருண்டோடி
வீட்டினுள்ளே விளையாடின.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:02 pm)
பார்வை : 0


மேலே