பலூன்

என் கையளித்த பலூன் நில்லாமல் மிதக்கிறது
பெரும் பரவசக் குமிழி போல
உடலிடுக்கில் பதுக்கிக் கொண்டு அலைகிறேன்
ஆகவே தரை தங்காமல்
எம்பி எம்பி மேகமாகிப் பார்க்கிறேன்
தோளால் விரலால் முட்டியால்
காலால் இடுப்பால் புட்டத்தால் என
அதை உதைத்து உதைத்து
என் களிப்புக்குச் சுவை கூட்டுகிறேன்
பலூன் கைகொள்ளாமல் காற்றுடன் மோகம் கொண்டு
எல்லா கதவுகளையும் தட்டுகிறது
சுவர்களையும் மோதுகிறது
எவரும் தொட்டுப் பற்றிக் கொள்ளத் துடிக்கிறார்
குதிக்கிறார் கைகளை நீட்டிப் பறித்துக் கொள்ள அலைகிறார்
எவருக்கும் அகப்படாமல்
எல்லோரையும் வான் நோக்க வைத்த அகந்தையுடன்
ஒரு பயணம் போல
அகண்ட சூரியனின் கண் கூசும் வெளியில்
காலிடுக்கி சிறகின் கைகள் அகட்டி விண்ணேகுகிறேன்
அவரவர் தன் வீட்டுக்குள் நூல்கட்டி
இடுப்பை இறுக்கி அதக்கிய பலூன் நாடி
கதவைத் திறக்கிறார்
உள்ளே நுழையும் காற்று
பலூனை வெளியே அள்ளிப் போகாதிருக்க
கதவைப் பக்குவமாய் மீண்டும் சாத்துகிறார்
திருப்தியுடன்.


கவிஞர் : குட்டி ரேவதி(2-May-14, 7:04 pm)
பார்வை : 0


மேலே