ஒன்றுபடு!

சாதி மதமெனும் பேதங்கள் சாயவே
தமிழா ஒன்றுபடு!
ஆதி மகளெனும் தமிழை அரசியாய்
ஆக்கி வாழவிடு!

கந்தன் பறையனென் றுரைக்கும் கயவனைக்
கண்ணீர் வர வதைப்பாய்!
இந்துவும் இஸ்லா மியனும் பொருதினால்
இருவரையும் உதைப்பாய்!

ஊருக்கூர் சண்டை தெருத்தெரு சண்டை
உருப்படு வோமோடா?
பாருக்குள் அடிமைத் தமிழர் நமக்குள்ளே
பத்துப் பிரிவோடா?

தேசம் பலவினும் வாழும் காக்கைக்குலம்
சிதைந்து பிரிவதில்லை!
பேசும் மொழியால் அவை ஒன்றுகூடும்
பெருமை நமக்கில்லை!

ஒன்று படடா தமிழா! உறுதுயர்
ஓடப் படை நடத்து!
வென்று புகழ்கொண்டு வாடா! விடுதலை
வேண்டும் தமிழனுக்கு!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 11:31 pm)
பார்வை : 35


பிரபல கவிஞர்கள்

மேலே