கறுப்பு நிலா

கண்ணகியே தாயே கறுப்பான இரும்பிடையே
பொன்னகையே பூவே புரட்சி துறவியவன்
தீட்டிவைத்த காவியமே திருமகளே தேனுக்குள்
போட்டுவைத்த பழம்போலப் பூந்தமிழர்க் கினிப்பவளே..

மாதத்தின் முழுநிலவே மறமகளே உன்னினிய
பாதத்தில் சின்னமகன் பாட்டுமலர் தெளிக்கின்றேன்
உச்சிமிகக் குளிர்ந்துவிட உன்னை புகழ்ந்து விட்டேன்
நிச்சயமாய் இனிஎன் நினைப்பைச் சொல்லுகிறேன்...

அந்திப் பூ விரிவது போல் அறிவை விரித்து வைத்துச்
சிந்தித்தேன் ஆமாம் சிரிப்புத்தான் வந்ததம்மா
உள்ளபடி உன் வாழ்க்கை உலகுக் குதவாத
செல்லுபடிஆகாத சிறுகாசு தானென்பேன்...

பருவநிலா காலத்தில் பயிரை போய் காவாமல்
அறுவடைக்குச் சென்றால் ஓ ஆழாக்கும் கிட்டாதே...

தொட்டு மாலையிட்டோர் தோகையரை கூடியபின்
விட்டு பிரிந்து வேறுதிசை போனாலும்
கண்ணீரைத்தினம் சிந்திக் கண்மூடி வாழ்வதுதான்
பெண்டிர்க்குக் கற்பென்று பேசினால் அக்கற்பே
இந்த உலகத்தில் இல்லா தொழியட்டும்
சந்தையிலும் விலை போகாச் சரக்காகி போகட்டும்...

கல்லாகி போனவளே கண்ணகி நீ பெற்ற
பொல்லாத மகனொருவன் புலம்புவதை கேளிங்கே
கட்டில் சுகங்காணக் காளையவன் சொல்லும்போதே
தட்டிக் கேட்டிருந்தால் தவறி யிருப்பானா...???

பெட்டி பாம்பாக பேசா திருந்ததுதான்
கட்டழகே நீசெய்த கடுங்குற்றம் முதற்குற்றம்

உப்பு கடல்நோக்கி ஓராறு செல்வதும்
இப்புவியிவில் வியப்பில்லை எழில்மகளே என்கணவன்
தப்பான கடல்நோக்கி தாவிச் செல்லும்போதே
அப்பப்பா ஈதென்ன அநியாயம் எனச்சொல்லி
அணையொன்றை கட்டியந்த ஆண்மகனைத் தடுத்திருந்தால்
தினைவனத்துக் கிளிபோலத் திருமகளே வாழ்ந்திருப்பாய்...

அளவாக தீயெரிந்தால் அதனை விளக்கென்போம்
அளவுக்கு மீறிவிட்டால் அதனை நெருப்பென்போம்
அளவுக்கு மேல்பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்கு போனதம்மா காத்துவைத்த உன்சொத்து...

உத்தமிநீ என்றேநான் ஒப்புகொள்வேன் ஆனால்
நித்திலத்தேன் பெட்டகத்தை நீயுன்றன் கைக்குள்ளே
வைத்திருக்க தெரியாமல் வாழ்விழந்து போனாயே
பைந்தியந்தான் உன்னைப் பார்புகழ பாடியவன்...

படையிழந்பின்னாலே பார்க்கவர நினைத்தாயே
உடைந்தவோர் ஆடியினை ஒட்டவைக்க முயன்றாயே
விரலொடிந்த பின்னாலே வீணைபெற நினைத்தாயே
கரமொடிந்த பின்னாலே கைவளையயைக் கேட்டாயே...

சிறகொடிந்த பின்னாலே தேன்மயிலே வானத்தில்
பறந்துவர நினைத்தாயே பால்திரிந்த பின்னாலே
குடிக்கநினைத்தாயே குளிரலைமேல் வெண்ணிலவைப்
பிடிக்க முயன்றாயே பேதைத்தலைமகளே....

அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடித்
திறம்பாடும் பூநகரைத் தீயால் எரித்தாயே
அத்திறத்தைச் சோணாட்டில் அணுவளவு காட்டி நின்றால்
சத்தியமாய் வாழ்வில் தளிர்த்துச் செழித்திருப்பாய்....

மன்னவனும் மாண்டதனால் மதுரை எரிந்ததனால்
உன் கணவன் நிலையாக உன்னிடத்தே மீண்டானா...???
கண்ணீரைத் துடைத்தானா..?? கனி மகளே உன்வாழ்வில்
பன்னீரைத் தெளித்தானா பாவி..படுபாவி...

கயவன் இழிந்தமகன் கண்மூடி போனவுடன்
மயங்கி விழுந்தாயே மடமகளே வாழ்நாளில்
பொய்யாகி போனமகள் புழுதியிலே செத்ததனால்
ஜயோ ஆ என்றலறி அழுது துடித்தாயே...


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 12:28 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே