சொல்லித்தானா தெரியவேண்டும்

தாயிருக்கையில் தனமிருக்கையில்
சஞ்சலமென்ன மானே -- நல்ல
பாயிருக்கையில் புழுதித் தரையில்
படுத்துப் புரளும் தேனே!
வாயிருக்கையில் கேளடி நல்ல
வான நிலவும் கொடுப்பேன் -- இன்று
நீயிருக்கிற நிலை சகியேன்
நிலத்தினில் உயிர் விடுப்பேன்.

என்ன குறைச்சல்? எதினில் தாழ்த்தி?
யானை போல அப்பா -- நீ
சொன்ன நொடியில் குறை தவிப்பார்!
சொல்லுவதும் தப்பா?

சின்ன இடுப்பு நெளிவதென்ன
சித்திரப் புழுப் போலே -- அது
கன்னி உனக்குக் கசந்ததுவோ
காய்ச்சிய பசும் பாலே?

அண்ணன்மார்கள் பாண்டியர்கள்
ஆசைக் கொரு தம்பி -- அவன்
எண்ண மெல்லாம் உன்னிடத்தில்!
ஏற்ற தங்கக் கம்பி
தண்ணென் றிருந்த உனதுமேனி
தணல்படுவது விந்தை -- உன்
கண்ணில் கண்ட அத்தானுக்குக்
கலங்கியதோ சிந்தை!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:59 pm)
பார்வை : 23


மேலே