ஈழத் தமிழருக்கு கருணாநிதி கவிதை

இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம்
இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார்.
உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில்
உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக்
கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத்
தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும்
வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்;

வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல் -
இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்து
இனம் காத்தோம் எனும் பெருமூச்செறிந்திட வழி கண்டு
இங்குள்ள நல்லோர் தரும் நன்கொடையாம் பரிவுத் தொகைகளை
"இதயமுள்ளோர் வாழ்க'' என்று இனிய நன்றி கூறிப் பெற்றுக் கொண்டு
அவற்றையெல்லாம் பண்டங்களாக்கி உணவு உடை பொருள்களாக்கி
அங்குள்ள உரியவர்க்குப் போய்க் கிட்டிட உகந்த வழி உடனே கண்டு
சர்வ தேச அமைப்புகள் மூலமாக அனுப்பி வைக்கவிருக்கின்றோம் -

அது போய்ச் சேராது என்றும் அது ஓர் நாடகமென்றும் அவசரக்கார தம்பி ஒருவரும்
அவையெலாம் வீணாக விடுதலைப் புலிகட்கே பயன்படுமென்று அம்மையார் ஒருவரும்
அதனால் நிதி கொடுக்காதீர் - இலங்கைத் தமிழரை வாழ வைக்காதீர் என்று
வெறிக் கூச்சல் போடுகின்றார் - அவற்றை நாம் பொருட்படுத்தாமல்
வெற்றுக் கூச்சல் என்றே எண்ணிக்கொண்டு இன்னும் வேகமாக
வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு
இதயத்தைத் தந்திடுவோம் - தேவையெனில்
இன்னுயிரையும் வழங்கிடுவோம்!


கவிஞர் : கருணாநிதி(3-Feb-12, 2:46 pm)
பார்வை : 45


பிரபல கவிஞர்கள்

மேலே