தொண்டு செய்யும் அடிமை

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச்
சுதந்திர நினைவோடா?
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப்
பாத்திர மாவாயோ?

ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதி சொல்ல வந்தாய்!-கண்முன்
நிற்கொ ணாது போடா!

அச்சம் நீங்கி னாயோ?-அடிமை!
ஆண்மை தாங்கி னாயோ?
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை
பேணுத லொழித் தாயோ?

கப்ப லேறு வாயோ?-அடிமை!
கடலைத் தாண்டு வாயோ?
குப்பை விரும்பும் நாய்க்கே-அடிமை!
கொற்றத் தவிசுமுண் டோ?

ஒற்று மைபயின் றாயோ?-அடிமை!
உடம்பில் வலிமையுண் டோ?
வெற்றுரை பேசாதே!-அடிமை!
வீரியம் அறிவாயோ?

சேர்ந்து வாழு வீரோ-உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ?

வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா!

நாடு காப்ப தற்கே-உனக்கு
ஞானம் சிறிதுமுண்டோ?
வீடு காக்கப் போடா!-அடிமை!
வேலை செய்யப் போடா;

சேனை நடத்து வாயோ?-தொழும்புகள்
செய்திட விரும்பாயோ?
ஈன மான தொழிலே உங்களுக்கு
இசைவதாகும் போடா!


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(3-Feb-12, 11:26 am)
பார்வை : 13


பிரபல கவிஞர்கள்

மேலே