வேண்டாம் இந்த விளம்பரம்
சமீபத்தில் நான் பார்த்த ஒரு வாசனை திரவியத்தின் விளம்பரம் அது. ஆடவர்களுக்காக தயாரிக்கப்பட்ட வாசனை திரவியம். அதை உபயோகப்படுத்தினால் பெண்கள் பலர் மயங்கி அந்த ஆடவன் பின்னால் வந்துவிடுகிறார்கள். மேலும் இதை விவரிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு நிமிடத்தில் பெண்களையும், அவர்களது ஒழுக்கத்தையும் சேற்றுக்குள் புதைத்து விட்டார்கள். இதற்கு மேல், பெண் வர்கத்தை இழிவு படுத்தவே முடியாது.
மற்றொரு விளம்பரத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். கொளுந்தனாருக்கு தலைவலி. அவரது அண்ணி ஆபாசமான உடை அணிந்து அவருக்கு தைலம் தடவி விடுகிறாள். கொழுந்தனார் தனது மகன் போல் அல்லவா? பாசத்தை வெளிபடுத்த வேண்டிய இடத்தில் ஏன் ஆபாசத்தை வெளிக்கொண்டு வருகிறார்கள்? பெண்களுக்கான இருசக்கர வாகனத்தில் கூட ஆபாசம்.வரைமுறையை மாற்றும் இவ்வகை விளம்பரங்கள் நம் பண்பாட்டின் ஆடையை அல்லவா நீக்கிறது.
ஊடகங்கள்,திரைப்படங்கள், விளம்பரங்கள், இவற்றை தொட்டுக்கொண்டுதான் நமது அன்றாட வாழ்க்கை பயணிக்கிறது. அயல்நாட்டிற்கு ஏற்றவாறு உருவாக்கப் பட்ட விளம்பரங்கள் நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை வதம் செய்து, நம் நாட்டு தேரிலேயே கம்பிரமாக பவனி வருவதை எவ்வாறு அனுமதிக்க இயலும்?
விளம்பரம் தேவைதான். ஆனால் அது நல்ல நோக்கத்தில் அல்லவா இருக்க வேண்டும். எல்லா வயது மக்களும் பார்க்கும் விளம்பரமாக அல்லவா இருக்க வேண்டும். இவை அடுத்த தலைமுறைக்கு நம் பண்பாட்டை செம்மைபடுத்தி கையில் தர வேண்டாம். கடைசிக்கு நம் பண்பாட்டின் அர்த்தத்தையாவது மாற்றாமல் இருக்கலாம் அல்லவா?
தமிழ்,தமிழர் பண்பாடு இவற்றை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில்,சாதாரண மக்கள் பேசினால் எவர் காதிலும் விழாது. சமுதாயத்தில் பிரபலமானவர்கள்,அரசியல் அதிகாரிகள் இதில் தலையிட்டால் தான் நம் பண்பாட்டை சீர்குலைக்கும் இவ்வகையான விளம்பரங்களை தடைசெய்ய இயலும் போலும்!!!