அனாதையாய் இருப்பதன் துயரம்!
நீங்கள் யாராவது
அனாதையாய் இருக்கிறீர்களா
அல்லது..., இருந்திருக்கிறீர்களா?
அப்படி இல்லையாயின்
அனாதைகளை அணுகி
மனதின் சாளரங்கள் திறந்து
இனிமேலாகினும்
ஆராய்ந்து ஆறுதலாகி அறியுங்கள்
அது வலிகளால் வடிவமைக்கப்பட்ட
வாழ்க்கையின் கதை
கதியற்று கைவிடப்பட்ட
கவலைகளின் சிதை
துயரங்களின் மொத்த உயரம்
துன்பங்களால் செய்த தூபி
பாதுகாப்பற்று
உடைந்து சிதறும் பாத்திரம்
பயனற்றதாக்கி கவனிப்பாரற்று
நிராகரிக்கப்பட்ட பத்திரம்
சத்திரங்களின் சுவர்களுக்குள்
யாரும் படிக்காமலிருக்கும்
சரித்திரங்கள்
சித்திரங்களாய் உருமாற
முடியாமல் தவிக்கும்
தரித்திரங்கள்
சூரியனோ,சந்திரனோ
பகலோ,பௌர்ணமியோ
சந்திக்க தவறிய
அமாவாசையின்
அநாயாச புத்திரர்கள்
மொத்தத்தில்
கவிஞன் ஒருவனின் கூற்று படி
“அனாதைகள்”
அன்பற்றுப்போன
(அநியாய விந்துகள்)
அடிபட்டு உருளும்
அவமான பந்துகள்.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

