நான் வேண்டுவன....(ரோஷான் ஏ.ஜிப்ரி.)

தினம் தேயாத நிலவு
தேகம் சுடாத சூரியன்
அலையற்ற கடல்
அலைச்சல் அற்ற பயணம்
வாய்மையுள்ள மனிதர்கள்
வாய் பேசும் மரங்கள்
உதிராத மலர்கள்
உடையாத தேன் கூடு
உதிரம் சிந்தா ஒரு உலகம்

எறும்பு தேனீ,காகம்
ஏதேனும் ஒன்றிடம்
சாகும்வரை பாடம் பயில
ஒரு சந்தர்ப்பம்

எழுத்துக்கள் இல்லா படப் புத்தகம்
இயக்கங்கள் அற்ற இலங்கை
இரண்டு சிறகுகள்
குழந்தைகள் சகிதம்
கூடி விளையாட
ஒரு பாட்டம் குருவிகள்

போட்டி இல்லாத தேர்வு
போராட்டமற்ற நல்ல கொள்கை
படுக்கைக்கு கூலி கேட்கா மனசு
பண்ட மாற்று முறையில்
வாழ்க்கை நடத்த
பணிக்கத்தக்க அரசு

நியாயமான நின்மதி
அநியாயத்திற்கு குரல் கொடுக்க
அனுமதி

இத்தோடு முத்தாய்ப்பாய்
கறையான்கள் இல்லா இடத்தில்
ஒரு களிமண் குடில்-அதில்
உறக்கத்தில் உயிர் பிரியும் வரம்!



ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (23-May-13, 5:35 pm)
பார்வை : 146

மேலே