எழுதிப் பழகுபவன்...!

வாழ்க்கையின் அழகு மிளிரும் இடங்களில் எல்லாம் பரிபூரணமான நண்பர்களும் ஆதரவாளர்களும் நம்மைச் சுற்றி மிகையாய் இருப்பார்கள். பிரியமானவர்கள் சூழ் வாழ்வு ஆசிர்வதிக்கப் பட்டது ஆமாம் பூக்கள் நிறைந்த தோட்டத்திற்கு நடுவே வசிக்க யார்தான் ஆசைப்பட மாட்டார்கள்.
தோழி கெளசல்யாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்டதுதான் எழுத்து.காம். நிறைய வளரும் எழுத்தாளர்கள் தங்களின் ஆக்கங்களை பகிரும் ஒரு களமாக எழுத்து.காம் இருப்பதை அதைக் கண்டபோது என்னால் உணர முடிந்தது. இலக்கிய அரட்டைகளும், தலைக்கனங்களும் இல்லாமல் ஆர்வமாய் நல்ல எழுத்துக்களை வாசிக்க முனைவோரும் எழுதுவோரும் இயல்பாக அங்கே கட்டுரைகளையும் கதைகளையும் கவிதைகளையும் பகிர்ந்து வருகிறார்கள். இலக்கணத்தோடு எழுதும் போதுதான் பொருள் கிடைக்கும். பொருள் கொடுக்கும் யாவும் இலக்கணத்தில் வெளியாகும் இயலாகிப் போகிறது. இவ்வளவுதானே இலக்கியம் அல்லது இலக்கியம் என்பதற்கு வேறேதேனும் சமைத்து வைக்கப்பட்ட வரையறை சூத்திரம் இருக்கிறதா? புரியாத மொழி கொண்டு உணர்வுகளை பிரதியெடுக்கும் நிகழ்வுதான் இலக்கியம் வரையறை செய்து கொள்வது இங்கே மட்டுப்பட்ட புலனறிவாகிறது.
ஒரு ஆக்கத்தின் கருப்பொருளை காட்சி வடிவமாக்கி உணர்ச்சிப் பூர்வமாக சொல்வது ஒரு வகை. இப்படியான எழுத்து வெகுஜனத்தின் மனதில் எளிதில் ஏறி அமர்ந்து கொண்டு எழுதியவனின் உணர்வை சரியாய் விளங்க வைத்து விடுகிறது. இங்கே இலக்கியம் என்று வகை பிரித்துக் கொண்டு வார்த்தைகளை வடிப்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் தோன்றிய உணர்வை உணர்ந்த படிமத்திலேயே வார்த்தையாக்கிச் சொல்கிறார்கள். அவர்களின் எண்ண ஓட்டங்களின் நேர், எதிர் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை கொண்டிருக்கும் அவர்களின் எழுத்துக்கள் வாசிப்பவனுக்கு எழுதியவனின் மனோநிலையை எப்போதாவதுதான் கொடுக்கின்றன.
பெரும்பாலும் வாசிப்பவனின் மனோநிலைக்கு ஏற்றார் போல ஏதோ ஒரு செய்தியை அந்தக் கட்டுரையோ அல்லது கவிதையோ, கதையோ மனதில் பதிய வைத்து விடுகிறது. எழுதுபவனுக்கும் வாசிப்பவனுக்கும் அங்கே மிகப்பெரிய இடைவெளி விழுந்து விடுகிறது. இங்கே எழுதுபவனும் வாசிப்பவனும் மேதாவிகளாய் இருக்க வேண்டிய கால நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இலக்கில்லாமல் நவீனத்துவத்தோடு எழுதுவது ஒரு வசதி. அந்த எழுத்து வாசிப்பாளனைப் பற்றிய பிரஞ்ஞையற்ற ஒரு யோகியின் மனோநிலையில் செய்யப்படுவது...; என்ன நிகழும் யார் வாசிப்பார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்புகளைக் கடந்த ஒரு நிலை அது. வெகுஜனத்தைப் பற்றிய அக்கறைகள் இன்றி கரை புரண்டோடும் ஒரு காட்டாறு அது.
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்று எழுதிச் செல்லும் போது, எதைக் கண்டார்? எதை விண்டுவிட முடியாது? விண்டிலர் என்றால் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் தேட விரும்பாத வாசகன் அந்த வார்த்தைகளை வெற்று வார்த்தைகளாய் பார்த்து விட்டு கடந்து சென்று விடுகிறான். உதாரணமாக் இன்று அதிகாலை நான் எழுந்த உடன் கண்ட அழகிய பனிமூட்டமும் அதீத குளிரும் எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது என்பதை...
" பனி படர்ந்த செடியொன்றின் நடுக்கத்தில் பூத்துச் சிரித்திருந்த ஒரு சூர்ய உதயத்தில் எனக்குள் கிளர்ந்தெழுந்த உணர்வுகள் கண்ணாடி ஜன்னலில் அடர்ந்திருந்த பனித்துவலைகளாய் சில்லிட்டுக் கிடந்தன...."
என்றும் எழுத முடியும்.
உணர்வுகளை அப்படியே வெளியாக்குபவனும், உணர்வுகளை தெளிவான காட்சி வடிவில் எழுத்தாக்குபவனும் வேறு வேறல்ல... ! அது ஒரு நிலை. இது ஒரு நிலை. புத்தன் தானுணர்ந்த ஞானச்செய்தியை வெகுஜனத்திற்கு கடத்த முடியாமல் உணர்வு நிலையில் பயிலச் சொன்னதால்தான் புத்தமதம் தோற்றுப் போனது. உணர்வு நிலையில் இருக்கும் பெருஞ்சக்தியை ஸ்தூலமாக கருதி வழிபடும் மதங்கள் எல்லாம் பெரும் வெற்றி பெற்றன. இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மதங்கள் இன்று உலகம் முழுதும் பரவிக் கிடப்பதற்கு காரணம் அங்கே அவர்களின் கடவுள் வலிமையானவராக சித்தரிக்கப்பட்டு மரணத்திற்கு பின்னான நுட்பங்கள் சித்திரவடிவில் மனிதர்களின் மனதில் ஏற்றி வைக்கப்பட்டதே காரணமாய்ப் போனது.
இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. நாம் உணர்வு நிலைக்குத் திருப்பாத காட்சி வடிவங்களை எழுத்தாக்கும் போது சொல்லும் செய்தியில் இருக்கும் புறத்தோற்றத்தை மட்டும் வாங்கிக் கொண்டு உணர்வுகள் எதிர் திசையில் பயணிக்கவும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன. எனவே இரண்டுக்கும் மத்திமமான ஒரு விசையோடு கட்டி எழுப்பப்படும் கட்டுரைகளும், கவிதைகளும் இன்ன பிற செய்திகளும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று விடுகின்றன.
அடிப்படையில் மனிதன் ஒரு செய்தி விரும்பி. அவனுக்கு புதிது புதிதாக செய்திகளை அறியும் ஆவல் இயல்பிலேயே உண்டு. அவனது கற்பனைகளோடு சேர்ந்து பயணித்துக் கொண்டே சமகால இயல்புகளையும், பிரச்சினைகளும் தேவைகளையும் ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல பிசைந்து கொடுக்கும் போது அவனுக்கு எழுத்தின் மீது அந்த எழுத்தை எழுதும் எழுத்தாளரின் மீது மிகப்பெரிய வசீகரமும் பிடிப்பும் தன்னிச்சையாய் வந்து விடுகிறது. வியாபார யுத்திக்காக சேர்க்கப்படும் வர்ணங்களோடு வாசிப்பவனின் நாடி பிடித்துப் பார்த்து உணர்வுகளோடு சங்கமிக்கும் எழுத்துக்கள் வெகுஜன எழுத்துக்களாகிறது. அந்த எழுத்தாளன் வென்றவனாகிப் போகிறான்.
அடிப்படையில் நான் உங்களிடம் பகிர விரும்பியதை தெள்ளத் தெளிவாக சொல்ல முடியவில்லை எனில், என்னுடைய பாண்டம் அதி ரகசியமானது, விலை மதிப்பு இல்லாதது என்றாலும்...அதற்கு ஒரு விலையும் இல்லாமல் போகிறது. பசித்திருப்பவனின் தேவை புல் பிளேட் சிக்கன் பிரியாணியா என்ன? பழைய சோறும் பாதி சிறு வெங்காயமும் கிடைத்தால் அவன் மகிழமாட்டானா...? இலக்கிய தரம், இலக்கிய தரம், என்று வெகு ஜனத்திற்கு தூரமாய் போகும் தலை பெருத்த கூட்டம் ஒரு பக்கமும், அது ஆவது எப்படி? இது ஆவது எப்படி? முப்பது நாளில் மூவாயிரம் கோடிகள் சம்பாதிப்பது எப்படி..? என்று லேகியம் விற்கும் கூட்டம் ஒரு பக்கமும் என்று...பிரிந்து கிடக்கையில் இதற்கு மத்தியில் காமத்தைக் காசாக்கும் ஒரு கூட்டமும் அலைந்து கொண்டுதானிருக்கிறது.
எல்லோரும் நடிகர்கள்தான் ஆனால் ரஜினிதான் சூப்பர் ஸ்டார். ஏன் தெரியுமா? எல்லா தரப்பினரும் அவரை ஏதோ ஒரு கோணத்தில் ரசிப்பார்கள். வெறுத்து ஒதுக்கும் படியாய் அவரிடம் பெரும்பாலும் ஒன்றும் இருக்காது. புதிதாய் ஏதேதோ செய்தாலும் அது முழு அபத்தமாய் இருந்தாலும் கூட ஏதோ ஒரு வகையில் அவரை ஆதரித்தோ எதிர்த்தோதான் தமிழ் சினிமா உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி இவர்கள் எல்லோருமே இப்படித்தான். இவர்கள் எப்போதும் மக்கள் மத்தியில் மக்களுக்கான செய்திகளைப் பேசிக் கொண்டே இருப்பார்கள். வெகுஜனத்தின் இதயத் துடிப்பாய் ஏதோ ஒன்றைப் பற்றி கருத்து கூறிக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் இறக்கும் வரை எம்.ஜி.ஆர் மக்கள் தலைவராய் இருந்தார், இன்னமும் அசைக்க முடியாத ஒரு ஆளுமையாகக் கலைஞர் கருணாநிதி இருக்கிறார்.
சுஜாதாவும், பாலகுமாரனும் உருவாக்கிய வாசகர்கள் கூட்டத்தை விடவா இன்றைக்கு இலக்கியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் உருவாக்கி விட்டார்கள். அறிவியல் + ஆன்மீகம் + வாழ்வியல், + க்ரைம் + த்ரில் + தொழில்நுட்பம் என்று பட்டையைக் கிளப்பிய சுஜாதாவும், வாழ்வியல் + பக்தி + ஆன்மீகம் + கடவுள் + காமம் + வரலாறு + புராணம் என்று சூட்சும விசயங்களை எல்லாம் எழுதி மிகையான தனது நாவல்களில் பெண்களை வலுவான சக்திகளாக்கி கதையின் மையப் பொருளாக்கி வாசக மனதில் விருட்சமாய் எழுந்து நின்ற பாலகுமாரன் ஐயாவும் தமிழ் புதின வரலாற்றில் மிகையான மனிதர்களுக்கு தாக்கத்தைக் கொடுத்து வாசக புரட்சியை உண்டாக்கினார்களா..? இல்லையா?
பதின்மத்தில் பாலகுமாரனின் எழுத்து வழிகாட்டாத வாசகர்களை நாம் விரல்விட்டு எண்ணி விடலாம். சுஜாதாவை வாசிக்காமல் இருந்தவர்களும் அப்படியே... இப்படியாய் எழுத்து என்பது வெகு ஜனத்தின் இதயத்தில் நுழையும் வகையில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. எழுத்து.காமை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தோழி கெளசல்யா வலைப்பக்கத்தில் நான் எழுத வந்த காலத்திலிருந்தே என் எழுத்துக்களோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர். எழுதுவது மட்டும்தான் எனக்கு தெரியுமே அன்றி அதை எப்படி எங்கே கொண்டு சேர்ப்பது என்பது எனக்கு பிடிபடாது.
எழுத்து.காம் என்னும் வலைத்தளத்தில் எனக்கான கணக்கினைத் தொடங்கியவர் கெளசல்யா. என்னுடைய ஆக்கங்களை உடனுக்குடன் அங்கே பதிவு செய்பவரும் அவரே. பல நேரங்களில் அங்கே வரும் கருத்துக்களுக்கு கத்தி முனையில் என்னை மறுமொழியிடச் சொல்லுவார். எழுத்து.காமில் இன்று 57 வாசக, எழுத்தாள நண்பர்கள் என்னைப் பின் தொடர்வதற்கும், அகன் அண்ணா போன்றவர்களின் அற்புத நட்பு கிடைப்பதற்கும், வேலூர் ராஜா, மங்காத்தா, kppayya, அன்பரசன், தாரகை , ப்ரியா அசோக், தாட்சாயிணி, ப்ரியா, பழனிகுமார், தவமணி,கவியாழினி, வேளாங்கண்ணி, சுதா யுவராஜ், எழுத்து சூறாவளி, அன்பரசன், வர்சா போன்றவர்களின் தொடர்ச்சியான உற்சாக கருத்துக்களுக்கும், வாசிப்புக்கும் காரணமாய் இருப்பவரும் கெளசல்யாதான்.
பாலகுமாரன் ஐயா சொல்வது போல நம்மைச் சுற்றி நம்மை நேசிக்கும் உள்ளங்கள் இருக்கும் போது நம் வாழ்க்கை பற்றிய அதிக அக்கறையை நாம் கொள்ள வேண்டியதில்லை என்பதை என்னால் இப்போது தெளிவாக உணர முடிகிறது. சென்ற மாதத்தின் சிறந்த படைப்பாக நான் எழுதிய அரசி என்னும் கதையை எழுத்து.காம் நிர்வாகம் தேர்ந்தெடுத்ததாக மின்னஞ்சல் வந்த போது அதன் முழு பாராட்டுகளும் தோழி கெளசல்யாவுக்கே செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
என் அப்பா அடிக்கடி சொல்வார்கள் ஒரு கருத்தை சொல்பவனை விட அதை மிகைப்பட்ட பேர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவனே சிறந்தவனென்று...அந்த வகையில் எனது மகிழ்ச்சியை தோழி கெளசல்யாவுக்கு உரித்தாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
பேஸ்புக்கில் கூட மொய் வைக்காது, மார்க்கெட்டிங் செய்யாது, கவர்ச்சியான விசயங்களைப் பகிராது, அரசியல் கூட்டுக்கள் இல்லாது வெகு ஜனத்தின் இதயத்தை தொடுதல் என்பது குதிரைக் கொம்பே. பேஸ்புக் மூலமாக இந்த எழுதிப் பழகுபவனின் எழுத்தை தொடர்ச்சியாக எழுத்திற்காக வாசிக்கும் அன்பான உறவுகளுக்கும் என்னுடைய அன்பை உரித்தாக்குகிறேன்...
நீண்டு அடர்ந்த காடு
காத தூரம் கடக்க வேண்டும்
இன்னும் இன்னும்...
என் மீதேறிக் கொள்ளும்
கனவுகளைச் சுமந்தபடியே...
தேவா சுப்பையா...