+அவனின் அவளின் காதல் கதை!+ (அ வேளாங்கண்ணி)
முன்குறிப்பு: இந்தக்கதையில் கொஞ்சம் பரபரப்பு இருக்கும். பரவாயில்லீங்களா?
            அதனால இந்தக்கதையையும் பரபரப்பாகவே ஆரம்பிக்கறேன்.
     பரபரப்பாக அந்தக்காலை வேளை விடிந்தது. ஆனால் அவனுக்கும், அவளுக்கும் அது அமைதியாகவே விடிந்தது. ஏனென்றால் அன்று கல்லூரி விடுமுறை. அன்றோடு அவர்கள் காதலில் விழுந்து ஓராண்டு ஆகிறது. விடிந்தும் இருவரும் காதல் மயக்கத்திலே, காதல் கனவுடன் படுத்திருந்தனர் அவன் அவன் வீட்டிலும், அவள் அவள் வீட்டிலும்.
     அவன் வீடு இருந்தது 9 ஆம் வீதி. அவள் வீடு இருந்தது 1 ஆம் வீதி. விதியின் விளையாட்டு இருவரையும் ஒரு நாள் 5 ஆம் வீதியில் சந்திக்க வைக்க, இருவருக்குள்ளும் காதல் தீ பற்றிக்கொண்டது. இருவருமே ஒரே கல்லூரியில் சேர, பரபரப்பாக அவர்கள் காதலும் வளர்ந்தது.
     கல்லூரிக்குப்பின் அவர்கள் சந்திப்பது அவர்களை காதலில் விழவைத்த 5 ஆம் வீதி பூங்கா தான். அன்று மாலை 6 மணிக்கு இருவரும் அதே பூங்காவில் சந்திப்பதாக பேசி வைத்திருந்தனர்.
     மாலை 6 மணியும் ஆனது. எப்பொழுதும் போல அன்றும் அவன் லேட்டாகவே வந்தான். ஏனோ தெரியவில்லை அவனுக்கு இது ஒரு வாடிக்கையாகவே போய்விட்டது.
     அவள் முன்பெல்லாம் இதனை பொறுத்துக்கொண்டாள். இப்பொழுது உள்ளுக்குள்ளே சிறிது கோபமும் வர ஆரம்பித்திருந்தது. ஆனால் அவளுக்கு அவன் மீதான காதலின் முன்பு இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
     அன்று இருவரும் இதனைப்பற்றித்தான் அதிகமாக பேசிக்கொண்டிருந்தனர்.
உனக்கு என் மீதான காதல் குறையத் தொடங்கிவிட்டதென நினைக்கிறேன். அதனால் தான் நீ லேட்டாக வருகிறாயோ? எனக் கேட்டே விட்டாள்.
     அவனால் இதனை தாங்கவே முடியவில்லை. நீ என்மீது வைத்திருக்கும் காதலைவிட, நான் உன்மீது வைத்திருக்கும் காதல் அதிகம் என அவனும் வாதிட ஆரம்பித்தான்.
     இறுதியில் பேச்சு முடியும் தருவாயில் யார் காதல் பெரியதென இருவரும் சோதித்துப்பார்க்க ஆசைப்பட்டனர். சரி, நாளை காலை சரியாக 6 மணிக்கு இந்த பூங்காவிற்கு யார் முதலில் நடந்து வருகிறார்களோ, அவரது காதல் தான் பெரிது எனப்பேசி இருவரும் பிரிந்து சென்றனர்.
     அதன்பின் அவன் மற்றும் அவளின் நேரம் அடுத்தநாள் காலை வரை மிகவும் பரபரப்பாக கழிந்தது. முதலில் இருவரும் மூளையை கசக்கி, ஆளுக்கொரு காரணம் கண்டுபிடித்து வீட்டில் சொல்லிவைத்தனர். அப்பொழுதுதானே காலையிலேயே வீட்டைவிட்டு கிளம்பமுடியும்.
     அவர்கள் இருவரது வீட்டிலிருந்தும் 5 ஆவது வீதி பூங்காவை நடந்தே அடைய சரியாக 15 நிமிடம் ஆகும்.
     அவனுக்கு இரவெல்லாம் உறக்கமே இல்லை. காலை சரியாக 6 மணிக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பிலேயே தூங்கிப்போனான். அவளுக்கும் அப்படித்தான். இரவெல்லாம் விழித்து விழித்து படுத்தாள்.
     அவனும் அவளும் அவரவர் வீட்டில் அலாரம் வைத்து 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டனர். 5.30க்கு எல்லாம் தயாராகிவிட்டனர்.
     உடனேயே வீட்டைவிட்டு கிளம்பியும் விட்டனர்.
     அவன் அவனது 9 ஆம் வீதியில் வீட்டைவிட்டு கிளம்பிய வேளையும், அவள் அவளது 1 ஆம் வீதியில் வீட்டைவிடு கிளம்பிய வேளையும் சரியாக இருந்தது.
     கைக்கடிகாரத்தை பார்த்தவாறு வேக வேகமாக 5 ஆம் வீதி பூங்காவிற்கு இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
     அவர்களது இந்த பரபரப்பான நிமிடங்கள், காலை வேளையில் வாக்கிங் போய்க்கொண்டிருந்த, வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக்கொண்டிருந்த, பால் வாங்கச் சென்று கொண்டிருந்த, பேப்பர் போட்டுக் கொண்டிருந்த என எவருக்குமே தெரியவில்லை.
     அடுத்து ஒவ்வொரு முறையும், இருவரின் வேகமும் சமமாக இருந்ததால், அவன் 8 ஆம் வீதியை அடைய, அவள் 2 ஆம் வீதியை அடைய, அவன் 7 ஆம் வீதியை அடைய, அவள் 3 ஆம் வீதியை அடைய் , அவன் 6 ஆம் வீதியை அடைய, அவள் 4 ஆம் வீதியை அடைய என சரிக்கு சரியாக வந்து கொண்டிருந்தனர்.
     6 ஆம் வீதியிலும், 4 ஆம் வீதியிலும் ஒரு முக்கிலிருந்து பார்த்தால் 5 ஆம் வீதி பூங்காவின் நுழைவாயில் நன்றாகத்தெரியும்.
     இருவரும் அவரவர் கைக்கடிகாரம் பார்க்க 6 மணியாக இன்னும் நேரம் இருந்தது.
     இவர்கள் பரபரப்பிற்கிடையில் நேரம் மெல்ல மெல்ல நகர்ந்தது. நேரம் ஆறையும் தொட்டது. பூங்காவிலிருந்த கடிகாரம் ஆறுமுறை நிசப்தத்திற்கு இடஞ்சல் செய்துவிட்டு ஓய்ந்தது. ஆனால் பூங்காவிற்கோ இதுவரை அவனும் வரவில்லை, அவளும் வரவில்லை.
     மணி ஆறு ஐந்து ஆகியது. ஆறு பத்தும் ஆகியது.
     பூங்கா கடிகாரம் நடக்கும் நிகழ்வுகளை கவனித்துக்கொண்டுதான் இருந்தது.
     சரியாக ஆறு பதினைந்திற்கு அவனும், அவளும் 6 ஆம் மற்றும் 4 ஆம் வீதி முக்கிலிருந்து 5 ஆம் வீதி பூங்காவை நோக்கி வர ஆரம்பித்தனர்.
     வரும் போதே இருவர் கண்களிலும் கண்ணீர், முகத்திலோ புன்னகை.
     அவன் முதலில் வரட்டும் என அவளும், அவள் முதலில் வரட்டும் என அவனும் காத்திருந்ததை பூங்கா கடிகாரம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது.
     அங்கு அவனும் ஜெயிக்கவில்லை, அவளும் ஜெயிக்கவில்லை. அவர்களுக்குள்ளிருந்த காதல் ஜெயித்தது.
     அவர்களைப்பார்த்து  பூங்கா கடிகாரம் சிரித்த அசட்டுச்சிரிப்பு அவர்கள் காதில் விழுந்ததா என்று என்னிடம் கேட்டால் எனக்கெப்படி தெரியும்!

