விமர்சனம் விமோசனம்

கற்பனையென்ற கடலில் மூழ்கினாலும்
கவிதை முத்தோடு மீளுவேன்.
சிந்தனையென்ற புயலில் தத்தளித்தாலும்
தமிழ் தென்றலோடு கரையேறுவேன்.
பிழையென்று பாறையில் மோதினாலும்
படைப்பு சிற்பத்தோடு காட்சியளிப்பேன்.

என்னை கத்தியால் குத்துங்கள்
வடியும் ரத்தத்துளிகள் துளிப்பாக்களாகும்.
தலையை கடப்பாறையால் தாக்குங்கள்
சிதறும் மூளைகள் புதுக்கவிதைகளாகும்.
கழுத்தை கயிற்றால் இறுக்குங்கள்
துடிக்கும் உயிர்த்துடிப்புக்கள் காவியங்களாகும்.

கருத்துக்கள் கடுமையாகவே இருக்கட்டும்
கவிதைகளை நான் கறைப்படுத்திருந்தால்...
கருத்துக்கள் பூமாலையாக இருக்கட்டும்
படைப்புக்களை நான் அழகுப்படுத்தியிருந்தால்..
கருத்துக்கள் மதிப்புரையாக இருக்கட்டும்
எழுத்தாளன் நான் சாதிக்கவேண்டுமென்றால்..

என் எழுத்துக்களை விமர்சியுங்கள்
என் எண்ணங்களை விட்டுவிடுங்கள்.
என் கவிதைகளை விமர்சியுங்கள்
என் கற்பனைகளை விட்டுவிடுங்கள்.
என் படைப்புக்களை விமர்சியுங்கள்
படைப்பாளிளே! பொறாமையை விட்டுவிடுங்கள்.

விமர்சியுங்கள் நட்புக்களே !
என் அன்னை மொழியால்
விமோசனம் பெறுவேன் !

---------------------------- இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (26-Sep-13, 7:31 am)
பார்வை : 206

மேலே