காதலித் துதி !-கே.எஸ்.கலை
மட்டுநகர் தமிழ்வாசம் – காது
மடலோரம் தினம் வீசும் !
மங்கையவள் மழலைமொழி–என்
மனதோரம் தினம் கேட்கும் !
மிகையன்பும் தொகையறிவும்
அவள் - நகையாகச் சூடுபவள் !
பகைக்கொண்டு குயிலோட
பல - வகையாகப் பாடுபவள் !
கொஞ்சலோடு குழவிமொழி
நெஞ்சத்துள் விதைப்பவள் !
அஞ்சலோடு காதல்மொழி
அகத்துள்ளே புதைப்பவள் !
நா மயங்க அறுசுவையில்
நல்லுணவு சமைப்பவள் !
நான் மயங்க பலசுவையில்
கள்ளுணர்வு படைப்பவள் !
முரப்பாவின் நிறத்தழகி - அவள்
முறைத்தாலும் பேரழகி !
விறைப்போடு பார்த்தாலும்-விழி
விருந்துபோடும் ஓரழகி !
கலையிவனின் கரம்பிடிக்க
பூத்திருக்கும் பாவையவள் !
கார்த்திகையில் நாள்குறித்து
காத்திருக்கும் பூவையவள் !

