பசி ஆ”று”(டு)ம் மேசை!(ரோஷான் ஏ.ஜிப்ரி)

இப்போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டிலும்
சாப்பிட உட்காரும் போது
ஒரு தொலைக் காட்சிப் பெட்டியும்
கூடவே வந்து அமர்ந்து விடுகிறது

குழம்புக்குரிய சுவையை
அதற்குள் தான் போட்டு
ஆக்கியிருக்கிறார்கள்

“ரிமோட் கொன்ரோல்”என்னும்
அகப்பை வைத்திருக்கும்
இளையவனுக்கு தெரியும்
உப்பு,காரம் தூக்கலாயிருக்கும்
“சனல்”கறிச்சட்டி எதுவென்று

மசாலா கலந்து
உரித்துப் ஆக்கிய கோழிதான்
அவனுக்கு பிடித்தமானது

அதனுள் ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு
யார் முந்தி
ஊட்டி விடுவதென்ற முனைப்புடன்
பிசைகின்றன ஒவ்வொரு கைகளும்

சோற்றின் கவளங்களை அள்ளி
வேண்டா வெறுப்புக்கு
திணிப்பவர்களுக்கு தெரியாது
உள்ளே வயிறு திட்டிக்கொண்டிருப்பது

வயிறு திட்டாமல் வாழ
தெரிந்து வைத்திருக்கிறான்
இணைப்பு வழங்கும்
“கேபிள் டிவீ”காரன்!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (23-Oct-13, 12:12 am)
பார்வை : 107

மேலே