ஆளுமை என்னும் பிணம் ரோஷான் ஏஜிப்ரி

வசீகரத்தின் மூச்சடங்கிய
ஒரு பிந்திய நாளின்
இரவுப் பாடையில்
கிடத்தப் பட்டிருந்தது
ஆளுமையின் பிணம்!

நிலவு தரையிறங்கி நீரில் அலைகிறது
தன் நிழலை தேடி..
பட்ட மரத்தில் இனியேது பூக்காலம்?
ஆயிரத்தி ஓராவது கேள்விகளுடன்
நட்சத்திரங்களில் கூடுகட்டிய நினைவுகள்
சுகமான இதங்களுடன் மிதக்கின்றன
மன வெளியில்....,

ஒவ்வாத இணைப்பில்
சமநிலை இல்லையென்று
நிரூபித்திற்று இன்றைய இருப்பு
இரு கரைகளுக்கு இடையில்
அருவி அசைகிறது மௌன நீரூற்ராய்

தேவையின் வெற்றிடங்கள் முழுவதுமாய்
இடைவெளிகள் நிரப்பியிருந்தன
தவிப்பு வெட்கித்து காத்திருக்க
தடைப்பட்டு முடிவுக்கு வருகிறது
பயணம் ஒரு அடியும் நகராமல்.

மலைகளை பனித்துளிகள் வாசிக்க
கேட்க நாதியற்று செவிடுதட்டின
பலமிழந்த புலன்கள்

வாழ்க்கை என்று வரும்போது
அகவையையும் ஆராயுங்கள் என
எப்படி சொல்வேன்
இளமையில் இறுக்கப்பட்ட
முதிர்ந்த குரலால் நான்?

குளிர் புல்லாங்குழலில் நிறைந்திருந்தன
வேட்கையின் புனல்
ஆளுமை என்னும் பிணத்தை
சமிபித்தபடி இன்றைய ஒவ்வொரு நிசியும்!

ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (7-Nov-13, 2:01 am)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 93

மேலே