மேதினிக்கு உரைக்கும் ஓர் பாடமே
படமில்லை இதுஒரு பாடமே
பார்த்திடும் நம் விழிகளுக்கு !
அனுபவங்களின் நடையிது
அறியாதவர்க்கு விடையிது !
முதுமை ஆனாலும் என்றும்
முதலில் வருவது அன்னையே !
கரம் பிடித்தவன் தொடர்வதும்
கரம் பற்றியவளை காத்திடவே !
தாங்குபவன் நான்தான் என்றாலும்
தாரம்தான் வழிகாட்டி என்கிறாரோ !
முதலில் நடந்தாலும் எனக்கு என்றும்
என் நிழலே அவர்தான் என்கிறாரோ !
தளர்ந்த மேனிதான் காண்பதற்கு
தலைநிமிர்ந்த நடைதான் இன்றும் !
ஊன்றிடும் கோலும் ஆதரவிற்கே
ஊரும் உலகும் அறிந்திடவே !
அசையா நம்பிக்கையோ இவர்களிடம்
அசையும் நினைவுகளோ இதயத்தில் !
வாழ்ந்த களைப்போ தோற்றத்தில்
வாடிய தேகமோ வயதானதால் !
உழைத்தே தேய்ந்திட்ட உடலிது
உழைப்பவரை தேடும் உள்ளமது !
மேனியின் சுருக்கங்கள் உருக்கமே
மேதினிக்கு உரைக்கும் ஓர் பாடமே !
பழனி குமார்