கூட்டுப்புழுவாய்

உன் கை பிடித்து
உன்னை நம்பி வந்த
பாவப்பட்ட ஜீவன் நான் !

நீ விரட்டினாலும்
விலக முடியாது
ஒரு சம்பிரதாயச் சங்கிலியால்
கட்டப்பட்டு
அறுத்து எறியவும் முடியாமல்
வெறுத்து ஒதுக்கவும் முடியாது
தினம் ,தினம் எனக்குள்
ஒரு யுக வேதனை !

சோகங்களுக்குள் நான்
ஆழ்ந்துகிடக்கிற போதெல்லாம்
உன்
நெருப்பு வார்த்தைகளின்
சவுக்குச் சொடுக்கில்
பிடரி சிலிர்த்து
என்
ரோஷக் குதிரை
விவாகரத்துப் பாதையில்
ஓடினாலும்
மீண்டும்
வெகு பவித்ரமான உணர்வுகளோடு
ஒரு
கூட்டுப்புழுவாய்
நம்பிக்கைக் குமிழுக்குள்
குறுகிக் கொள்கிறது !

நந்தவனமென
நம்பி வந்தேன்
கல்லிலும் , முள்ளிலும்
கட்டாந்தரையிலும்
இழுத்துச் செல்கிறாய் -
ஒரு நிமிடத்தில்
உதறி விடலாம் தான்
ஆனாலும்
இன்னார்க்கு இன்னாரென்று
தேவன் போட்ட
பாதையென்பதால்
முன்னிலும் கெட்டியாய்
உன் கரம் பற்றி
பின் தொடர்கிறேன் !

நீ
நல்ல மேய்ப்பனா ?
எனக்குத் தெரியாது
ஆனால்
நான் வழிமாறத் தெரியாத
அப்பாவி ஆடு !

உன்னைத் தொடர்வது
எனக்கு வலியாகயிருந்தாலும்
அதுவே
என் வழியாகிப் போனது .

எழுதியவர் : பாலா (8-Apr-14, 8:08 pm)
Tanglish : koottuppuluvaai
பார்வை : 143

மேலே