நண்பனின் கல்யாணம்
(உங்கள் நண்பன்-நண்பி கல்யாணத்திலும் இப்படி நடந்திருக்கக் கூடும் :)
"மாப்ள! மாப்ள!" என்றழைத்து
கல்லூரி நாட்கள் முதலே
தயார் படுத்திய
நண்பன் ஒருவன் கல்யாணத்திற்காக
ஊருக்கெல்லாம் சேதி சொல்ல
சுத்திச் சுத்தி
வந்த களைப்பு...
மணமகன் அறைக்
கதவு பின்னால்
Scent Bottle-உம், சந்தனமுமாய்,
Powder -உம், பன்னீருமாய்,
மேடையில் மணமகள் முன்னே
நண்பனும் ஒரு நாள்
அழகாய் தெரிவதற்கு
வாசனை, அரிதாரங்கள் பூசிப் பூசி
வந்த களைப்பு...
பந்தல் முதல்,
பந்தி வரை,
சொந்த பந்தங்கள்
முகம் வாடாதவாறு
காபிகள் கொண்டே பசியாறி,
பின், கடைசிப் பந்தியில்
உண்ணும் போது
வந்த களைப்பு...
இரவு ஒரு மணி வரை
முழித்திருந்து
ஆரஞ்சும், வெத்தலையும்,
கொட்டப்பாக்கும், கடல மிட்டாயும்
வைத்து தாம்பூல பைகள்
ஐநூறு போட்டப் பின்
வந்த களைப்பு...
முதலிரவு கனவுகளுடன்
அறைக்குச் சென்று திரும்பிய
நண்பனைப் பார்த்து, மறுநாள்
"ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!"
என்று சொல்லி கலாய்க்கையில்
இந்த களைப்புகள் யாவும்
கலைந்து, களிப்பாகி விடுகின்றன!