மூவர்ணக் கொடி

மூண்டெழும் வான்புகழ் முழங்கையிலே
மூவர்ணக் கொடி உயர்ந்திடுதே!
ஈன்றவள் தளைகள் நீங்கிடவே
ஈந்தவர் நினைவுகள் நிழலிடுதே!
காவியும் வெண்மையும் நம் குணங்கள்;
கண்கவர் பச்சை மண் குணங்கள்;
நீலத்தில் சக்கர ஆரங்கள்
நீதியை குறித்திடும் சாரங்கள்.
‘’வலிமை வெல்லும்’’ என்பார் முன்
‘‘வாய்மையே வெல்லும்’’ என்றுரைத்தோம்
‘‘வாழ்வதற்காய் அழி’’ என்றவர்க்கு
‘‘வாழு, வாழ விடு’’ என்றோம்.
மாநிலம் சேர்ந்தொரு நாடானோம்;
மலர்க் கண்ணிகள் சேர்ந்தொரு சரமானோம்;
உண்ணிகள் உட்புக சதி புனைந்தால்
உருத்தெரியாமல் உடைத்தெறிவோம்!
அருணை ஜெயசீலி