தக்காளி சூப்பும் சுதந்திரமும்

அன்றொருநாள் சிறுவயதில்
திண்ணைமடி மீதமர்ந்து
தென்னைமர நடுவினிலே
வெண்நிலவை ரசித்திருந்தேன்!

அன்னையவள், கையில் கிண்ணமுடன் வந்தாள்...!
என்னவென்றேன் – செந்நிறமாய்
தக்காளிப் பழச்சூப்பைக் கிண்ணமதில் தந்து
பருகிடுவாய் என்றாள்!!

பருகிடுவேன், பருகுமுன்நான்
உருகிடவும் கூடுகின்ற
நல்லதொரு கதைசொன்னால்,
மிக்கநலம் என்றேன்!

பின்னவளும் நொந்தபடி
நம்மன்னை பாரதத்தின் நோகுங்கதை சொன்னாள்!

முக்கிலும் மூலையிலும் முட்டிமோதி
சிக்கித் தவிக்கின்ற பெருங்கூட்டம் நடுவில்
முக்கி வெளிப்பட்ட முனகல்கள் ஆயிரம்!

திக்கற்றோர் உடல்மீது சொடுக்கிடுஞ் சாட்டையால்,
விக்கலை உதடுகள் விளிக்கும் வேளையில்
சட்டெனப் பிறந்திட்ட பலநூறு புலிவரிகள்!

'கிட்டுமோ கிட்டாதோ அபயம்' என,
முட்டியும், மோதியும், அலறியும், வெளிறியும்,
சிதறிக்கதறின...பெருங்கூட்டம்!

ஜாலியன் வாலாபாக் நரியின் வேட்டையில்,
மொத்தமாய் விழுந்தவை கவிழ்ந்து மடிந்தன!

துப்பாக்கி முனையில் உப்பாக்கி
நம்மைத் தப்பாமல் முக்கிக் கடலில் கரைத்தனர்
கடல்தாண்டி வந்தவர்கள்!

கரைந்தோம் உப்பாய்!
கரைந்த உப்பையும் காயவைத்து,
நிறைந்த மனமுடன் வரிவிதித்தாண்டது,
விருந்தினர்க்கூட்டம்!

மருந்தாய் முளைத்த கிழவனும்,
கிறுக்கு மாமனும்,
இவ்விதமாய், இன்னுமின்னும் பலநூறுமாந்தர்களு மந்நாளில்
முன்னும்பின்னுமாய் மூக்குடைபட்டனர்!

அவர்தம் மூட்டுகள் உடைந்தன!
வேட்டுகள்,
மார்பைத் துளைத்தோடி மறுபுறம் வீழ்ந்தன!
சாய்ந்த மரங்களாய்ச் சரிந்தனர் மக்கள்!

உதைபட்டோம்!!
உரத்துக் குரல்தந்தோர் உதிரம் சிதற,
உயிர்விட்டோம்!
மரணங்கூட பெரிதல்ல - பிறர்
‘மலம் தின்னும் பிணி’ தரும் சிறைபட்டோம்!

நிறைநிலவாம் பெற்றாள், கறைபட்டாள்!
வளர்நிலவாம்கட்டின, பெண்டிரோ கற்பிழந்தாள்!
சிறுநிலவாம் பிள்ளைகளின்
குருதிதோய்க் கண்ணீரில்
வரும்பொழுதின் கனவையெல்லாம்
இழந்தழுதன நம்கண்கள்!

வீடிழந்து,
விளை நிலமிழந்து,
மிகு செல்வமு மிழந்தோம்!

மதியிழந்து, பின்
மானமிழந்து,
மனிதம் மரணித்த ஓர்நாளின் நல்லிரவில்
சுதந்திரமென்னும் சொர்கக்கதவை
மரக்கலமேறிநம் மண்மிதித்தாண்டவன் திறந்துவைத்தான்!!

ஆகா, சுதந்திரம்!
அருமைச் சுதந்திரம்!!
எங்கும் சுதந்திரம்!
எதிலும் சுதந்திரம்!!
சுதந்திரம்!
சுதந்திரம்!!
சுதந்திரம்!!!
அன்று, சுதந்திரமென்ற சொல், விடும்மூச்சானது!!

மூச்சானது,
காற்றில் கலந்து கரைந்துபோனதும்
சுதந்திரம் பின்வெறும் பேச்சானது!!

இன்றோ,
சுதந்திர மென்றொருநாள் தேவை - பெறுகின்ற
விடுமுறைக்காக!
சுதந்திர மின்றொருநாள் தேவை - தருகின்ற
இனிப்பிற்காக!

எது சுதந்திரமென்பதும்,
ஏன் சுதந்திரமென்பதும்,
விளக்குதல் இன்று வீண்பொழுதாயின!
விளங்கிக் கொள்ளலும் வேண்டாதாயின!

அடிக்கும் அடியில்
உடைந்த எலும்பதன் நடுவில்
பிணைத்த சதைகள் கிழிபட பெருகின செந்நிறக்குருதி
விழுந்து தெறித்ததும் வீணோ?! - அது
விழலுக்கிறைநீர் தானோ?!

அன்னை, வினவி நிறுத்தினாள்!
பின், கிண்ணத்துச் சூப்பைப் பருகிட நீட்டினாள்!!
விதிர்த்த மனத்துடன்நான் நீட்டின விரல்களில்
நழுவின கிண்ணம், தரையில் தெறித்தது – சூப்பு
பரவி வெறித்தது என்னை!!!
செந்நிறச்சூப்பு, தரையில்
பரவி வெறித்தது என்னை!!!

*******************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (14-Aug-14, 10:00 pm)
பார்வை : 714

சிறந்த கவிதைகள்

மேலே