ஒரு நிமிடம் பொறுங்களேன்

“ ஒரு நிமிஷம் தாண்டி வண்டிய எடுத்தா இப்ப என்ன ஆகிடப்போவுது? கொஞ்சம் பொறுமய்யா” என்று கூறிவிட்டு வேகவேகமாக பாதி எரிந்த சிகரெட்டை புகைத்துவிட்டு விசிலடித்தார் கண்டக்டர்,பயணிகள் ஏறிக் கொண்டிருக்க பேருந்து புறப்பட தயாரானது
என் பெயர் கபிலன், என் வாட்சை பார்த்தபோது மணி காலை 8.32, நின்று கொண்டிருந்த இடம், ஒரு பேருந்து நிலையம்.
“எப்படியும் பேருந்து வர்றதுக்கு ஓரிரு நிமிடங்கள் ஆகும் அதுவரைக்கும் இந்த பேருந்து நிலையத்தில் எதையாவது ரசிக்கலாமே” என்றெண்ணியவாறு என் கண்களாலேயே நிகழ்வுகளை படம் பிடிக்க ஆரம்பித்தேன்.
அம்மாவிடம் ஐஸ்கிரீமுக்கு அடம்பிடிக்கும் சிறுமி, வாட்டர் பாக்கெட்டேஏஏ... என கூவி கூவி விற்கும் சிறுவன், எடை பார்க்கும் எந்திரத்தில் தன் எடை பார்த்து பூரித்து வயிற்றை தடவி பார்க்கும் கர்ப்பிணிப் பெண், காது கிழிய ஹாரன் அடித்துக் கொண்டிருந்த பஸ் டிரைவர்,அங்கிருந்த டிவியில் ஓடிய நகைக்கடை விளம்பரம், லாவகமாக டீ ஆற்றிக் கொண்டிருந்த டீக்கடைக்காரர், எப்போ சார்? பஸ் ஸ்டாண்டுலயா? என்று அலைபேசியில் பேசிக்கொண்டு பதட்டத்தில் எதையோ துழாவிக் கொண்டு இருந்த போலீஸ்காரர். பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு அநாதைக் குழந்தை, அநாதையாய் கிடந்த ஒரு நீல நிறப்பை?! அது என்ன? அதில் என்ன இருக்கும்?????
டமால்..............
வெடித்துச் சிதறிய என் ரசனைகளோடு நானும் தூக்கி வீசப்பட்டேன்.கழண்டு விழுந்த என் வாட்சில் மணி சரியாக 8.33 ஐக் காட்டியது.இனியும் படமெடுக்க என் கண்கள் சக்தியில்லாமல் மயங்கிக் கொண்டிருந்தன.
சற்று நேரத்தில், ஆம்புலன்சு சத்தமும் போலீஸ் வேன் சைரன் சத்தமும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. இறந்தவர்களையும், காயம்பட்டவர்களையும் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றார்கள்.என்னையும் ஒரு ஸ்ட்ரெச்சரில் தூக்கிக் கொண்டு சென்ற போது, முழுவதும் மயங்கும் முன் இறுதியாக என் காதில் ஒலித்த அந்த வார்த்தைகள்
“ஒரு நிமிஷம் பொறுங்கய்யா.................”

எழுதியவர் : ஆ.நிக்கல்சன் (7-Sep-14, 6:00 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
பார்வை : 184

மேலே