கனவு வியாபாரம்

எந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தெரியாமல் ஆரம்பிக்கும் என்னுடைய எல்லா ஆக்கங்களும் யாருக்காக ஆரம்பிக்கிறது? அது எங்கே செல்கிறது? யாருக்கான பொருள் அதில் நிரம்பிக் கிடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. ஒவ்வொரு முறையும் பார்வையற்ற ஒருவனைப் போல எனக்குள் புதைந்து கிடக்கும் கனவுகளயும், வலிகளையும், சந்தோசத்தையும் தடவித் தடவிப் பார்த்து அதன் அர்த்தம் விளங்கி மெல்லமெல்ல இதுதான் இன்னதுதான் வரைகிறோம் என்று தெரியாமல் உருவமற்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும் ஓவியனின் தூரிகையிலிருந்து சிதறும் எந்த வித உத்தேசமும் இல்லாத வர்ணங்களாய்த்தான் இந்த சொற்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

திடீரென்று ஒரு மழை நேரத்து மாலை எனக்கு நினைவில் வரும். மாலைக்குப் பின்னால் அடர்த்தியாய் நின்று கொண்டிருக்கும் இருட்டு நினைவுக்கு வரும், நான் நடந்து கொண்டிருப்பது ஒற்றையடிப்பாதையாய் இருக்கும். துணைக்கு யாரோ ஒரு மூதாட்டி தலையில் முந்தானையைப் போட்டு மழையைச் சமாளித்தபடி மெல்ல மெல்ல நடந்து கொண்டு பழங்காலத்து அவளின் கதைகளை அப்போது எனக்குச் சொல்லிக் கொண்டு வருவாள். மின்சார விளக்குகள் இல்லாத அந்த இருள் சூழ்ந்த பயணத்தில் மழைக்காலத்து தவளைகளின் சப்தங்கள் இன்னும் ஒரு அடர்த்தியான அமானுஷ்யத்திற்குள் என்னைக் கொண்டு போய் தள்ளி விடும்...

சடாரென்று எனக்கு இறந்து போன என் தாத்தாவின் அன்றைய தினம் நினைவுக்கு வரும். நாடியோடு சேர்த்து தலையில் கட்டுக் கட்டி, நெற்றியில் காசு வைத்து அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பெண்கள் சுற்றி உட்கார்ந்து வைத்த அந்த ஒப்பாரி நினைவுக்கு வரும். சுவரோரமாய் சாய்த்தி வைக்கப்பட்டிருக்கும் தாத்தாவின் சடலம் அதற்கு முதல் நாள் உயிரோடு இருந்த அந்த முதியவரைப் பற்றி ஆழமாய் எண்ண வைக்கும். எங்கே போனார் அவர் இன்று? எங்கே போயிருக்கும் அந்த உயிர் என்று வாசலில் நின்று அந்த கிராமத்து இருட்டு வானத்தை பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பேன் நான். அழுகையும், இயலாமையும், வாழ்க்கையின் நிச்சயமற்றத் தன்மையும் சேர்த்து என்னை பிசைய.... அனிச்சையாய் கடவுளே... என்ற வார்த்தை வாய்க்குள் இருந்து எட்டிப்பார்க்கும். கடவுள் என்பது மனித சோகங்களில் இருந்து விடுபட கண்டிபிடிக்கப்பட்ட ஒரு உபாயமா? பகிர்தலுக்கு யாருமில்லையென்று போய்விடக்கூடாது என்று மனிதர்க்கு மனிதர் செய்து வைத்த ஒரு யுத்தியா...?

யோசித்துக் கொண்டே அந்த ஒற்றையடிப் பாதையில் நான் நடந்து கொண்டிருக்கையில் என் கூட நடந்து வந்த அந்த மூதாட்டியின் குரல் நின்று வெகு நேரம் ஆகி போனது அப்போதுதான் என் நினைவுக்கு வந்து திரும்பிப் பார்க்கையில் அங்கே யாருமில்லாமல் சுடுகாட்டு கொட்டகை ஒன்றில் ஒரு பிணம் எரிந்து கொண்டிருப்பது துல்லியமாய் தெரியும். எரியும் அந்தப் பிணம்தான் அந்த மூதாட்டியாய் வந்ததா என்ற கேள்வி ஒன்று பசியோடு கட்டுச் சோத்து மூட்டை ஒன்றைப் பிரிக்கும் வழிப்போக்கனைப் போன்று அதுவரையில் படித்து மூளையில் சேமித்து வைத்திருக்கும் பல மர்மக்கதைகளையும் மெல்ல மெல்ல அவிழ்க்க ஆரம்பிக்கும். பயம் கழுத்துக்கு கீழே பின் புறத்தில் அவஸ்தையாய் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இரத்தம் உடம்புக்குள் ஜிவ்வென்று கீழிருந்து மேலும், மேலிருந்து கீழாய் பாயத் தொடங்குகையில்....

காக்க காக்க, கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க என்று வேறு ஒரு யுத்தி உள்ளுக்குள் எழுந்த பயத்தை அடக்க வீறு கொண்டு எழும். முருகன் தமிழ்க்கடவுளாம், முருகன் தமிழர் பெருந்தலைவனாம், குறிஞ்சி நிலத்தை ஆண்ட வீர தீர பராக்கிரமசாலி அல்லவா அவர்...? சூரபத்மனை வதம் செய்த மாவீரன் அல்லவா...? யாருக்கும் அஞ்சாத அவர் கையில் கேடயம் கூட வைத்துக் கொண்டு சண்டையிட மாட்டாராம் ஒரு கையில் வாள், இன்னொரு கையில் வேல்....வா மோதிப் பார்த்து விடுவோம் என்று தொடை தட்டி சீறிப்பாய்வானாம் அந்த சிங்கார வடிவேலன்....

கையிலிருக்கும் வேலின் வடிவம் ஆணின் விந்தணுவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாம். வேலின் நுனி எப்படி கூறாய் இருக்கிறதோ அப்படித்தான் விந்தணுவின் தலைப்பகுதி இருக்குமாம். வேகமாய் சீறீப்பாயும் கோடாணு கோடி விந்தணுக்களில் எது வேகமாய் சென்று பெண்ணின் கரு முட்டையை துளைத்து உட்செல்கிறதோ அதுவே உயிராகிறது. அதுதான் வெல்கிறது. நிஜத்தில் எது வெல்கிறதோ அதுவே வேல் என்று பெயர் மருவி அழைக்கப்பட்டதாம். எது வெல்கிறதோ அது வேல். விந்தணுவைப் போன்று வடிவமைக்கப்பட்டதால் அது வேல் ஆனதாம்..... வெற்றி வேல்...வீரவேல்... வெற்றி வேல் வீர வேல்..... என்று முருகனின் படைகள் போருக்குச் செல்லும் போது கத்திக் கொண்டுதான் சென்றிருக்கும்....

சூரபத்மனை அழிக்க...அவனை வென்று ஜெயிக்க, இயங்காமல் இருக்கும் சத்தியத்தை உசுப்ப.....வெற்றி வேல்..வீர வேல்...வெற்றி வேல் வீரவேல்....சப்தமாய் நானும் கத்திக் கொண்டு எனக்கு ஏற்பட்ட பயத்தை விரட்ட முயலும் போது...சடாரென்று அங்கிருந்து நினைவு கழன்று கொண்டு மெல்ல என் மார்பினில் கேவிக் கொண்டிருப்பவளின் தலை கோதிக் கொடுத்துக் கொண்டே எனது பக்கவாட்டில் இருகும் உடை வாளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும். மீண்டு வருவேன் என்று காதல் எனக்குச் சொல்லும், ஆனால் விடியற்காலையில் நிகழப்போகும் அந்த உக்கிரப் போரோ என் உயிரைக் குடித்தாலும் குடித்து விடலாம் என்று எதார்த்தம் புத்திக்குள் சோழி போட்டுப் பார்த்து விளையாடிக் கொண்டிருக்கும்....

வாசலில் கால் மாற்றி, மாற்றி உறங்காமல் நிற்கும் என் புரவியைப் போல மனதுக்குள் திமிர் கோரப்புலியாய் உறுமிக் கொண்டிருக்கும். நீங்கள் திரும்பி வருவீர்களா...? எனக்கு அச்சமாயிருக்கிறது என்று என்று தேம்பிக் கொண்டிருப்பவளை வாரி இழுத்து அணைத்து கீழுதடு பற்றி, கழுத்து முகர்ந்து, கூந்தல் ஒதுக்கி ஒரு உக்கிரக் கூடலை முடிவு செய்து முன்னேறிக் கொண்டிருகையிலேயே அவளின் காதுகளுக்குள், போரிடுவது எனது வாழ்க்கை...வெற்றியோ தோல்வியோ, வாழ்வோ சாவோ வாழ்வின் கடைசித் தருணம் வரை நான் வாள் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். நான் வாள் வீசுவது நின்று போனால் எப்படியும் என் தலை யாரோ ஒருவனின் வாள் வீச்சுக்கு இரையாகிப்போகும்....

எல்லா போர்களும் வீரத்தை நிலைநாட்டுவதாய் எடுத்தியம்பிக் கொண்டாலும் அவை நிஜத்தில் உயிர் பயத்தின் உச்சமென்று அறிவாய் பெண்ணே....., காதல் கொள்தலும் காதலின் பொருட்டு தீராக் காமம் கொண்டு மிருகமாய் உன்னை வேட்டையாடுவதும் உயிர் வாழ்தலை உறுதிப்படுத்திக் கொள்ளவும், எனக்குப் பின்னால் என் வித்து காலங்காலமாய் இந்த உயிர் பந்தில் ஜீவித்து நிற்க வேண்டும் என்ற பெரும் யாக்கையை தீர்த்துக் கொள்வதற்காகவும்தான்... இந்த வாழ்க்கையே பழி தீர்த்துக் கொள்தலில்தான் உருண்டு கொண்டிருக்கிறது....

ஒன்றிற்காக ஒன்று இன்னொன்றிற்காக இன்னொன்று, இதைச் செய்தாயா, நான் இதைச் செய்கிறேன், நீ அதைச் செய்தாயா மாறாக நான் வேறு ஒன்றைச் செய்கிறேன் பார் என்று மாறி மாறி பழி தீர்த்துக் கொள்தல் சாத்வீகமாகவோ, இல்லை பெரும் வன்முறையாகவோ நிகந்து கொண்டே இருக்கிறது. உன்னோடான கூடல் ஒரு பழிதீர்த்துக் கொள்ளல்,விடியலில் நிகழ்வது எதுவாகவோ இருக்கட்டும், இந்த உக்கிரப் போரில் எமது பெரும்பபடைகள் வெல்ல வேண்டுமென்பது மட்டுமே எனது லட்சிய்ம். இப்போழுது, திசைகளைக் கிழித்துக் கொண்டு சென்று எதிரியின் உடலைக் கிழிதெறிதல் எப்படி என்ற கணககீடுகளை நான் செய்தாக வேண்டும்....

அவளை ஆக்கிரமிக்கத் தொடங்குவேன். துடி துடித்து தீர்த்துக் கொள்ளும் மூர்க்க காமம் நிறைந்த புத்திதான் ஒரு போராளியை தீரமுள்ளானாய் ஆக்கும்.

யுத்தம் தொடங்கி இருந்தது. அம்புகளை அவர்கள் சாரை சாரையாக தொடுத்துக் கொண்டிருந்தார்கள், ஆக்ரோசமாய் படைகள் முன்னேற அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அடி வாங்க வேண்டி இருந்தது அடி வாங்கிய பின் அதைத் திருப்பி கொடுக்கும் போது அந்த அடி இன்னமும் உக்கிரமாய் எதிரியின் மீது விழுந்தது. எதிரியின் வேகம் அதிகமாயிருந்த போது பணிந்து போவது போல கொஞ்சம் அடங்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. எதிரி அடித்து அடித்து ஓய்ந்து களைத்து போக மீண்டும் தாக்குதல் ....வெற்றி வேல்....வீர வேல்...வெற்றி வேல் வீர வேல்....

படை வீரர்கள் அடித்து துவம்சம்செய்தபடியே வேலோடு சீற்ப்பாய....போரின் போக்கு மாறிப் போனது...இன்னும் சற்று நேரத்தில் யுத்தம்முடிந்து போகலாம்...துள்ளளோடு பாய்ந்து ஓடி எதிரியின் இலக்கை கண்டு பிடித்து, எதிரியோடு நேருக்கு நேர் நின்று போரிட்டு வெற்றியின் உச்சத்தில் கதறியபடியே.....உடல் துடிக்க வாள் வீசிக் கொண்டிந்த போதே.....சரலென்ற எதிரியின் வாள் என் கழுத்தில் பதிய.....

என் குரல்வளை வெட்டுப்பட்டு....இரத்தம் கழுத்தின் கீழ் கொப்பளிக்க....சரெலென்று புரவியிலிருந்து கீழே குப்புற விழுந்தேன்....இதோ நின்று போகப் போகிறது என்வாழ்க்கை, உடல் துடிக்க, ரத்தம் பெருக்கெடுத்து ஓட....கால்களும் கைகளும் துடி துடிக்க...போர்க்களத்தின் சப்தம் மெல்ல மெல்ல ஒடுங்கி போக பெரும் மயான அமைதிக்குள் நான் விழுந்து கொண்டிருந்தேன். முந்தைய இரவில் அவளின் கழுத்தில் முகம் புதைத்து துடி துடித்துக் கிடந்த கூடலின் உச்சம் என் நினைவுக்குள் பளீச் சென்று கண நேரம் வந்து போக....அந்த சூன்யத்திற்குள் நான் காணாமல் போனேன்....

கையிலிருந்த சிகரட்டை மீண்டுமொரு முறை ஆழமாக இழுத்துப் புகைத்து சமகாலத்திற்குள் மெல்ல மெல்ல ஒரு படிக்கட்டில் இறங்கி வருவது போல இறங்கி வந்து கொண்டிருந்தேன். வாழ்க்கை வாழ்க்கை என்று எல்லோரும் கணத்துக்கு கணம் மரணித்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள்...? மரணம் என்ற இருண்ட பிரதேசத்துக்குள் விழுந்த பின்பு மரணம் மரணம் என்று வாழத்தொடங்குவோமோ என்னவோ....எங்கெங்கோ இழுத்துச் செல்லும் நினைவுகளை எழுத்தாக்குபவனுக்கு இலக்கு இதுதானென்று எதுவும் இருக்குமா என்ன...? மீண்டுமொரு கனவுலகிற்குள் சஞ்சரிக்க என் புரவி தயாராகிக் கொண்டிருந்த போது....

குதித்து ஓடி வந்து எதார்த்த வாழ்க்கைகுள் தற்காலிகமா ஒளிந்து கொண்டு விட்டேன்...!

எழுதியவர் : Dheva .S (6-Nov-14, 5:49 pm)
Tanglish : kanavu vyapaaram
பார்வை : 270

மேலே