ஒரு குடையின் சுய சரிதை

நான் உரு எடுத்த இடம் சைனா
என்னை உருவாக்கியவன் ஒரு
கூலித் தொழிலாளி.
ஒருவன் முதலாளி என்னும்
பெயரில் வருவான் என்னை
உருவாக்கும் தொழிலாளியை
ஏதேதோ சொல்லி திட்டுவான்
என்னைத் தூக்கி திருப்பி திருப்பி
பார்ப்பான் தடாலென கீழேபோட்டுச்
செல்வான்..
அந்த தொழிலாளி என்னைத்தூக்கி
பக்குவமாக உருவம் கொடுத்து அழகு
பார்த்து பின்னர் உறை என்னும் பெயரில்
உடை அணிவித்து என் அழகையும்
ஆரோக்கியத்தையும் மதிப்பீடு செய்து
ஒரு பெறுமதி அட்டை ஒட்டி என்னைப்
போல் பலர் இருக்கும் அறையில்
அடுக்கி வைத்தான்..
சில தினங்களிலே எங்களை எடுக்க
வந்த சிலர் பெரிய பெட்டியில் போட்டு
பூட்டிய பின் கடல் மேல் மிதக்கும்
கப்பல் வழியாக வந்தடைந்தோம்
இந்தியாவில்..
பல கடை முதலாளிகள் பெறுமதி
கொடுத்து பங்கு போட்டு அனைத்து
உறவுகளையும் எடுததுச் சென்றனர்
பல இடங்களுக்கு..
நான் வந்தஇடமோ சென்னை
பெரிய கடை பல பெண்கள்
வந்து செல்லும் இடம்.
கடை முன்பாக தொங்க விட்டார்
முதலாளி என்னை..
வீதியில் போகும் பலரின் கண்கள்
என்னைப் பார்த்து ஆசை கொள்ளும்
நான் அழகான நீல நிறத்தில் உள்ள
ஆடையில் சிகப்பு பூ பச்சை இலை
மஞ்சள் கனி பதித்த துணி அணிந்து
ஆழகு தேவதை போல் இருந்தேன்..
இரு நாட்களில் ஒரு இளம் பெண்
என்னை வாங்கி வந்தாள் அவள்
ஒரு ஆசிரியை..
அவள் வெள்ளை நான் நீலம்
இருவரும் இணைந்தால் அழகுக்கோலம்
வீதியில் சென்றால் பல ஆண்கள் கண்
அவளை பார்க்கும் பெண்கள் கண்
என்னை நோக்கும்..
வெயிலிலும் மழையிலும் உற்ற தோழியானேன்
நான் அவளுக்கு..
பத்திரமாக பார்ப்பாள் பக்குவமாக பாவிப்பாள்
பாசமா பத்திரமா நான் அறியேன்..
எதிர் பாராமல் ஒரு நாள் புயல் காற்றில்
சிக்கினோம் இருவரும்..
என் அங்கங்களின் சில நரம்புக் கம்பி
உடையவே நான் நோயாளி ஆனேன்..
தூக்கி வைத்தாள் திண்டுக் கட்டில்
நான் நினைத்தேன் எப்படியும் குணமாக்கி
விடுவாள் நான் இல்லாமல் அவள் வெளியில்
செல்ல சிரமப்படுவாள் என்று..
எதிர் பார்ப்போடு காத்திருந்தேன் ஒரு வாரம்
சென்றதும் புது தோழியாக ஒரு குடையுடன்
வந்தாள்..
என் நிலைமை அதோ கதியாகப் போனது
அப்போதுதான் ஒரு உண்மையை உணர்ந்தேன்
ஏழைதான் நம் உடல் காயங்களை சரி செய்து
மீண்டும் நம்மை சேர்த்துக் கொள்வான்..
பணக்காரன் புதிது வரும் வரை தான் என்னை
வைத்துக் கொள்வான் என்று புரிந்தது
இப்போது..
நான் தூசி படிந்து எலி மூத்திரத்தில்
நனைந்து கரப்பான் பூச்சிக்கு பாதுகாப்பு
கொடுக்கின்றேன்..
எப்படியோ ஒரு உயிருக்கு உதவும்
திருப்தியுடன் நான் கிடக்கின்றேன்
பரண் மேல்..!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (6-Nov-14, 1:45 pm)
பார்வை : 316

மேலே