சாலை பாதுகாப்பு salai pathukappu

(தமிழ் ஓசை நாளிதழின் இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான சேவியர் அவர்களது கட்டுரை)

ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும். இங்கிலாந்துக் காரர் சொன்னார், எங்கள் ஊரில் இடது புறமாகச் செல்லும். இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும்.

சாலைப்பயணம் என்பது மரணத்தை முன்னிருக்கையில் அமரவைத்துச் செல்வது போலாகிவிட்டது இப்போது. வாகன எமன் எப்போது வந்து உயிரை இழுத்துச் செல்வான் என்று அறியமுடியாத சூழல். எப்போதும் மரணம் நிகழலாம் என்னும் நிலையில் நிகழ்கின்றன இன்றைய சாலைப் பயணங்கள்.

இந்திய சாலைகளில் மட்டுமே சுமார் மூன்று இலட்சம் விபத்துகள் வருடம் தோறும் நிகழ்கின்றன. எண்பதாயிரம் உயிர்களைக் கொல்லும் இந்த சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாலைகளைப் பயன்படுத்துவோரின் அலட்சியமே தொன்னூறு விழுக்காடு விபத்துகளுக்குக் காரணமாகிறது என்று இந்தியாவிலும், உலக அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மஞ்சள் விளக்கு என்பது வேகத்தைக் குறைப்பதற்கான எச்சரிக்கை விளக்கு என்பதற்குப் பதிலாக வேகத்தைக் கூட்டுவதற்கான எச்சரிக்கை விளக்காகத் தான் சென்னை வாசிகள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மஞ்சள் விளக்கு வந்தவுடன் காரை நிறுத்தினால் பின்னால் வருபவன் அடுத்த சிக்னல் வரும் வரை திட்டித் தீர்ப்பான். அல்லது மூன்று இருசக்கர வாகனங்களும், இரண்டு ஆட்டோ க்களும் நம்முடைய காரை முத்தமிடும்.

சென்னையில் லேன் இருப்பதும், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதும் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். இரயில்வே கிராசிங் என்றால் இருசக்கர வாகனத்தை சாய்த்து நுழைப்பது எழுதப்படாத தேசியச் சட்டமாகிவிட்டது.

ஆட்டோ க்கள் என்றால் பாம்பு போல வளைந்து ஓட வேண்டும் என்பதும், தண்ணி லாரி எனில் சோகிப் அக்தரின் வேகப் பந்து போல செல்ல வேண்டும் என்பதும், இரு சக்கர வாகனங்கள் எனில் கோடிட்ட இடங்களை நிரப்புவது போல செல்லவேண்டும் என்பதும் தான் இன்றைய சென்னை போக்குவரத்து விதிகள். இந்த விதிகளின் படி செயல்படவில்லையெனில் வசவும், புதுசா ஓட்டறான் போல என்னும் நக்கல் பேச்சுகளும் தான் பரிசு.

உலகின் எண்பது சதவீதம் வாகனங்கள் வளர்ந்த நாடுகளிடம் இருக்கின்றன. ஆனால் எண்பது சதவீதம் விபத்துகள் வளரும் நாடுகளில் தான் நிகழ்கின்றன என்கிறது ஆய்வு ஒன்று. காரணம் வளர்ந்த நாடுகளில் உள்ள சீரான போக்குவரத்து விதிமுறைகளும், அதை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்படும் பாரபட்சமற்ற சட்ட ஒழுங்குகளும் தான்.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சாலை விதி முறைகளை மீறுவோர் பாரபட்சமின்றி தண்டனை பெறுகிறார்கள். குறிப்பிடப்பட்டுள்ள வேகத்துக்கு அதிகமாக வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அபராதம் கட்டியே ஆக வேண்டும். விஸ்கான்சின் மாநிலத்திலுள்ள மில்வாக்கி யில் அதிக வேகத்தில் ஓட்டிய ஒரு உயரதிகாரிக்கு போக்குவரத்துக் காவலர் அபராதம் விதித்த நிகழ்வு ஜர்னல் செண்டினல் பத்திரிகையில் வெளியானது.

ஓட்டும் வேகத்துக்கு ஏற்ப அபராதத் தொகை அதிகமாகும். எத்தனை தடவை வேகமாய் ஓட்டுகிறோம் என்பதற்கு ஏற்பவும் அபராதம் அதிகரிக்கும். பள்ளிக்கூடம் இருக்கும் பகுதிகளில் வேகமாகக் காரை ஓட்டினாலோ, சாலைப் பணி நடக்கும் இடங்களில் வேகமாக காரை ஓட்டினாலோ பல மடங்கு அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அபராதம் கொடுக்க வரும் காவல் துறையினரை லஞ்சம் கொடுத்தும் மடக்க முடியாது.

வாகனங்களில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட இருக்கைகள் வார்ப்பட்டைகளோடு இருக்கின்றன. அங்கே அந்த இருக்கைகளில் தான் குழந்தைகளை அமர வைக்க வேண்டும், இல்லையேல் கடுமையான அபராதம் கட்ட வேண்டியது தான்.

குறிப்பிட்ட வரிசையில் பயணிப்பவர்கள் சிக்னல் செய்யாமல் அடுத்த வரிசைக்குச் செல்வதோ, அல்லது குறுக்கும் நெடுக்குமாக ஓட்டுவதோ அமெரிக்காவில் அபூர்வமான காட்சிகள். முன்னால் செல்லும் யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் பின்னால் வருபவர் ஹார்ன் அடித்து கண்டிப்பார். அப்படிச் செய்வது முன்னால் செல்பவரைத் திட்டுவது போல. அமெரிக்காவில் வருடக்கணக்கில் கார் ஓட்டினால் இரண்டு மூன்று முறை ஹார்ன் சத்தம் கேட்கலாம் அவ்வளவு தான்.
மற்றவர்களின் கவனத்தைக் கவரவோ, ஹாய் சொல்லவோ, தவறு ஏதும் நிகழாமல் ஹார்ன் அடிப்பதோ சட்டப்படி குற்றம் அமெரிக்காவில்.

அமெரிக்க சாலைகளின் வலது ஓரத்தில் அவசர தேவை வாகனங்கள் செல்வதற்காக மட்டுமே ஒரு வரிசை இருக்கும் (ஷோல்டர் என்பார்கள் ) . அதில் வேறு வாகனங்கள் ஏதும் செல்லக் கூடாது என்பது சட்டம். அதை யாரும் மீறுவதும் இல்லை. சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் வருகிறது என்றால் உடனே எல்லோரும் வலது ஓரமாக சென்று வழிவிடவேண்டும். போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் இந்த அவசர சிகிச்சை வாகனம் ஓரமாய் இருக்கும் பிரத்யேக சாலையில் பயணிக்கும். நோயாளிக்கு போக்குவரத்து நெரிசலினால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

‘நில்’ என்னும் அறிவிப்புப் பலகை சிறு சாலைச் சந்திப்புகளிலெல்லாம் காணப்படும். நள்ளிரவானால் கூட அங்கே பயணிக்கும் வாகனங்கள் அந்த அறிவிப்புப் பலகையைப் பார்த்தவுடன் நின்றுவிட்டு தான் செல்கின்றன.

பள்ளிக்கூட சிறுவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் கதவு திறந்திருக்கிறது என்றால் ‘நில்’ என்று அர்த்தம். குழந்தைகள் இல்லையென்றால் கூட, கதவு திறந்திருக்கும் பள்ளிக்கூட வாகனங்களைக் கடந்து செல்லும் வாகனங்கள், நின்று விட்டுத் தான் சென்றாக வேண்டும். இல்லையேல் பள்ளிக்கூட வாகன ஓட்டியே நிற்காமல் செல்லும் வாகனங்களின் விவரங்களைக் காவல் துறைக்குத் தெரியப்படுத்தி அபராதம் செலுத்த வைப்பார்.

மேலை நாடுகள் எல்லாவற்றிலுமே பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் சாலை விதி வழக்கத்தில் உள்ளது. சாலையில் பாதசாரி வந்துவிட்டார் என்றால் வாகனங்கள் நின்று அவருக்கு வழிவிட்டுச் செல்கின்றன. இது பெரும்பாலான விபத்துகள் நிகழாமல் தடுக்கிறது.

1896ம் ஆண்டு முதல் சாலை விபத்து பதிவு செய்யப்பட்டபோது மக்கள் அதிர்ந்து போனார்கள். சாலையில் விபத்துகள் நடக்குமா? என்ற வியப்பு அவர்களுக்கு. ‘இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்று உடனே அறிக்கைகள் வெளியிடப்பட்டன. நூற்றாண்டு கடந்து விட்டது, இன்று சுமார் ஒன்றரை கோடி பேர் வருடம் தோறும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிறார்கள். சுமார் ஐம்பது கோடி பேர் காயமடைகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO) . இதே நிலை நீடித்தால் இந்த புள்ளி விவரங்கள் இரண்டாயிரத்து இருபதுகளில் இன்றைய நிலையை விட சுமார் அறுபத்தைந்து விழுக்காடுக்கு மேல் அதிகரிக்கக் கூடும் என்று அந்த நிறுவனம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வளரும் நாடுகளில் ஏற்படும் அதிகப்படியான விபத்துக்குக் காரணம் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகள் என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை. தமிழ் நாட்டில் மட்டும் எண்பத்து மூன்று இலட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு மட்டும் சுமார் அறுபத்து ஆறாயிரம் விபத்துகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சாலை விபத்துகளில் காயமடைபவர்களைப் பொறுத்தவரையில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல் என்பது வளரும் நாடுகளில் மிக மிகக் குறைவு. ஆனால் வளர்ந்த நாடுகளில் காயமடைபவர்களில் 98 விழுக்காடு மக்கள் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். காரணம் அவர்களுடைய வாகனங்கள் விபத்துச் சோதனைகளையும், காற்றுப் பை வசதி போன்றவற்றையும் கொண்டிருப்பதும், அங்கு வாகன ஓட்டிகள் இருக்கை வார்ப்பட்டை அணிவது கட்டாயமாக்கப் பட்டிருப்பதும் தான்.

பல நாடுகளில் விபத்து நிவாரண உதவிகள் நல்ல நிலையில் இல்லாததும் விபத்துகளில் காயமடைவோர்களை வெகுவாகப் பாதிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் விபத்துக் காப்பீடு செய்து கொண்டிருப்பது மிகவும் அபூர்வமாகி இருப்பது விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவ உதவியைப் பாதிக்கிறது.

விபத்துகளின் மூலமாக உயிரிழப்புகள் நேர்வதற்குக் காரணங்களாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதலாவதாக, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், தேவையற்ற சாலைப்பயணங்களும், சாலைகளின் உறுதிக்கும் தகுதிக்கும் மீறிய வாகனங்களின் எண்ணிக்கையும், வாகனங்களின் வடிவங்களும் விபத்துகளை நிர்ணயிக்கும் காரணிகளில் சில. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் இவையெல்லாம் ஒரே நேரத்தில் ஒரே சாலையில் செல்லுமிடங்களில் விபத்துகள் அதிகரிக்கின்றன.

இரண்டாவதாக, அதிக வேகமாய் காரோட்டுவதும், குடித்து விட்டு காரோட்டுவதும், கைபேசி போன்றவற்றைப் பயன்படுத்தி சாலையில் கவனத்தை செலுத்தாமல் வண்டி ஓட்டுவதும், வாகனங்கள் செல்ல சரியான சாலை வடிவமைப்பு இல்லாமல் இருப்பதும், சாலை விதிகள் சரியாக அமுல்படுத்தாமல் இருப்பதும் விபத்துக்கான காரணங்களில் இன்னும் சில.

மூன்றாவதாக இருக்கை வார்ப்பட்டை அணியாமல் இருப்பது, வாகனம் ஓட்டும் வயது வராதவர்கள் வாகனம் ஓட்டுவது, மக்களிடையே சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது, வாகன ஓட்டிகள் செய்யும் சிறு சிறு தவறுகளை மன்னிக்கும் மனநிலை இல்லாமல் இருப்பதும் போன்றவையும் விபத்துகளை ஊக்குவிக்கின்றன.

நான்காவதாக விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள் வருவதில் ஏற்படும் தாமதமும், விபத்து நடந்த இடத்தில் முதலுதவி வசதிகள் செய்யப்படாமல் இருப்பதும், மருத்துவ நிலையங்களுக்குச் செல்வதற்கு ஏற்படும் காலதாமதமும் விபத்து உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாகி விடுகின்றன.

சாலை பாதுகாப்பு என்பது தனிநபர் சார்ந்த விஷயமல்ல. சாலை விதிகளை அரசு நிர்மாணிப்பதும், அதை அதிகாரிகள் கவனிப்பதும், வாகன தயாரிப்பாளர்கள் நாட்டின் சாலைகளுக்கும் போக்குவரத்து விதிகளுக்கும் ஒப்ப வாகனங்களைத் தயாரிப்பதும், காப்பீட்டு நிறுவனங்களின் ஈடுபாடும், தனிநபர்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும், தனியார் தன்னார்வ நிறுவனங்களின் ஈடுபாடும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்புவிப்பதற்கும் முக்கியத் தேவையாகின்றன.

ஸ்வீடனில் விஷன் ஸீரோ சாலை பாதுகாப்புக்கு ஒரு முக்கியமான உதாரணமாகக் கொள்ளலாம். இங்கு நடப்பது சைக்கிளில் செல்வது போன்றவை அதிகமாக ஊக்குவிக்கப்படுவதால் மக்களுடைய ஆரோக்கியமும், மாசற்ற காற்று உலவும் சூழலும், மோட்டார் வாகன விபத்துகளற்ற நிலையும் உருவாகியுள்ளது.

சாலை விபத்து என்பது எழுதப்பட்ட விதியல்ல. அதை மிக எளிதில் சரி செய்துவிட முடியும். இருக்கின்ற சிறு சிறு சட்டங்களை கடைபிடிப்பதும், அடுத்தவரை மதித்து நடக்கும் போக்கும் இருந்தாலே போதும் சாலை பயணம் ரம்மியமானதாகி விடும்.

ஒரு பொதுவான சாலை விதி வேண்டும் என்னும் உடன்படிக்கை ரோமில் 1906ம் ஆண்டு நடந்த ‘இண்டர்நேஷனல் ரோட் காங்கிரஸ்’ ல் இடப்பட்டது. . பல மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகளை விட மொழி வேறுபாடற்ற சின்னங்கள் எளிதில் மக்களுக்குப் புரியும் என்பதற்காக இவை ஆரம்பிக்கப்பட்டன. அபாய முன்னறிவிப்பு, முக்கியத்துவம் குறித்த சின்னங்கள், தடை செய்யப்பட்டதை தெரிவிக்கும் சின்னங்கள், கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சின்னங்கள், சிறப்பு அறிவிப்பு சின்னங்கள், சாலைப் பணி சின்னங்கள், திசை காட்டும் சின்னங்கள் போன்ற பல பிரிவுகளில் இவை வடிவமைக்கப்பட்டன.

பண்டைக்காலங்களில் சாலை சின்னங்கள் மைல்கற்களை வைத்தே அறியப்பட்டன. பண்டைய ரோம பேரரசில் பெரிய தூண்கள் போன்ற மைல்கற்களை ஏற்படுத்தி ரோம் நகரத்துக்கு வரும் வழியும், தொலைவும் சொல்லப்பட்டிருந்தது. அதன் பின் நாகரீகம் வளர வளர மரப் பலகைகள், உலோகப் பலகைகள் என சின்னங்கள் தாங்கும் தளங்கள் மாறின. இப்போது நவீனயுகத்தில் பேசும் சின்னங்கள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

சின்னங்களைப் போலவே பொதுவான நிறங்களையும் விளம்பரப் பலகைகள் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பச்சை பலகையில் வெள்ளை நிறத்தால் எழுதப்பட்டிருப்பவை திசை, தூரம் போன்றவற்றை அறிவிக்கும் பலகைகள். நீல நிறத்தில் இருந்தால் அவை ஓய்வு நிலையங்கள், உணவகங்கள், பெட் ரோல் நிலையங்கள், தங்குமிடங்கள் போன்றவற்றைக் குறிப்பவை. மஞ்சள் பலகையில் கறுப்பு எழுத்துக்கள் எனில் அவை எச்சரிக்கை அறிவிப்புகள் என ஒவ்வொரு வகையான தகவலுக்கும் நிறங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

விளம்பரப் பலகையின் நிறங்களைப் போலவே வடிவங்களும் வகைப்படுத்தப்பட்டு தனித் தனி செய்தி அறிவிக்கின்றன. விளம்பரப் பலகையிலுள்ள எழுத்துக்களோ, சின்னங்களோ அழிந்து போனால் கூட வடிவங்கள் அதன் அர்த்தத்தை உணர்த்தி விடுகின்றன. அல்லது தொலைவிலிருந்தே வடிவங்களைக் கண்டு வாகன ஓட்டுநர்கள் அறிவிப்பினை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

வேகமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சாலையில் செல்லும்போது கவனத்தைச் சிதறவிடும் செயல்களில் ஈடுபடக் கூடாது. நமக்கு முன்னால் செல்லும் வாகனத்தை மட்டும் கவனிக்காமல் அதற்கு முன்பும், நம்மைச் சுற்றிலும் கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும். வலது புறம் இடது புறம் திரும்புகையில் மிகவும் எச்சரிக்கையுடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யாமலும் திரும்பவேண்டும். கார்களில் பயணிக்கும் போது வாகன ஓட்டியின் இருக்கை முடிந்தவரை முன்னே இருக்கவேண்டும். அருகில் செல்லும் வாகனங்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுடைய வேகத்தையும், செயல்பாட்டையும் கணிக்க வேண்டும், நமது வாகனத்தின் தன்மை வேகம் குறித்த பிரக்ஞை வேண்டும். இரவிலும், சோர்வாக இருக்கும் போதும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவேண்டும். இவையெல்லாம் சாலை விபத்தைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் நமக்குத் தரும் அறிவுரைகள்.

வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குதல் சரிசெய்யப்பட வேண்டும். குறுக்கு வழிகளில் உரிமம் பெறுவது முழுமையாக தடை செய்யப்படவேண்டும். அரசு சாலை விபத்துகளைக் கணக்கில் கொண்டு சாலை பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும். சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே வரவேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ளது போல எழுத்துத் தேர்வு, கண் பார்வை தேர்வு போன்றவையும் ஓட்டுநர் உரிமை பெறத் தேவை என்ற நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும்.

ஓட்டுநர் உரிமங்கள் புதுப்பிக்கும் போதும் கண்பார்வை சோதனை, சாலை விதிகள் குறித்த தேர்வுகள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் வெறுமனே வாகனத்தை இயக்குவதை மட்டும் கற்றுத் தராமல் சாலை விதிகளுடன் கூடவே மனரீதியான தயாரிப்பையும் வழங்க வேண்டும். சாலை விதிகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்னும் மனப்பான்மையை உளவியல் பயிற்சிகள் உருவாக்க வேண்டும்.

விதி மீறல்களுக்கான தண்டனைகள் அபராதங்கள் போன்றவை தவறு செய்ய நினைப்பவர்கள் தங்கள் சிந்தனையை மறு பரிசீலனை செய்ய வைக்க வேண்டும். ஒவ்வொரு தொன்னூறு வினாடிகளுக்கும் ஒரு விபத்து என்னும் நிலையில் இந்திய சாலை பயணம் திகிலூட்டுகிறது. ஒவ்வொரு ஏழு நிமிடத்திற்கும் ஒரு மரணம் நிகழ்வதாக இன்னொரு அறிக்கை சொல்கிறது. உலகில் நிகழும் மொத்த வாகன விபத்துகளில் ஆறு சதவீதம் இந்தியாவில் நிகழ்கின்றன. பல இலட்சக் கணக்கான வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனம் ஓட்டுகிறார்கள். காரணம் மாட்டிக் கொண்டாலும் பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை, லஞ்சமாக ஐம்பதோ, நூறோ ரூபாய் தான் !

சாலை விதிகள், சாலை பராமரிப்பு, சாலை பாதுகாப்பு எல்லாம் சட்ட முன்னுரிமை பெறவேண்டும். தனியார் இயக்கங்களுடன் இணைந்தோ, அல்லது அரசோ சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை, விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வர வேண்டும்.

நிர்ணயிக்கப் பட்டவேகம், பாதுகாப்பு கவசங்கள் அணிதல், மது அருந்தியோ கைபேசியில் பேசிக்கொண்டே செல்பவர்களை கடுமையாய் தண்டித்தல், அணுகக் கூடிய பாதுகாப்பு, முதலுதவி நிலையங்கள் அமைத்தல் போன்றவையெல்லாம் சாலை விபத்துகளின் விபரீதங்களை பெருமளவில் குறைக்க உதவும். வாகன பயன்பாட்டாளர்களும் சரியான தர சோதனை செய்யப்பட்ட வாகனங்களையே பயன்படுத்துவதும் பாதுகாப்பான பயணத்தை நல்க முடியும்.

சாலை விபத்துகளுக்கு சாலைகளின் வடிவமைப்பு, தரம், வாகனங்களின் தரம், அளவு, வேகம் என ஒவ்வொரு சிறு சிறு விஷயமும் காரணமாகின்றன. சாலை விதிகள் என்பவை தலை விதிகள் அல்ல. அவற்றை அணுகும் முறையில் அணுகினால் விபத்துகளற்ற பயணம் சாத்தியமே என்பதற்கு வளர்ந்த நாடுகளே முக்கிய உதாரணமாகத் திகழ்கின்றன.

வரையறுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தப் பட்ட சட்ட செயல்பாடுகளால் இத்தகைய சாலை விபத்துகளைத் தவிர்த்து இந்தியாவை உலகின் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இணைக்கச் செய்ய முடியும். காவல்துறை தன்னுடைய கடமை மீறுதல்களை சாலைகளில் செயல்படுத்தாமல் இருப்பதே பெரும்பாலான சாலை விதி மீறல்களை நிறுத்திவிடும். லஞ்சம் கொடுத்து தப்ப முடியும் என்னும் நிலை இருக்கும் வரை சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்னும் எண்ணம் மக்களிடம் வலுப்பெறாது.

எழுதியவர் : சாலை பாதுகாப்பு (9-Sep-14, 11:57 am)
சேர்த்தது : Adam Biju1
பார்வை : 94708

மேலே