புது உலகம்

புது உலகம்

ஒற்றை புள்ளியில் ஆரம்பித்திருக்கிறேன் என் வாழ்க்கையை. “நான்” என்னும் உணர்வுகளே என்னிடம் இல்லை. நான் யாராய் இருக்க முடியும்? பெண்ணாகவா, ஆணாகவா? இல்லை இரண்டுமற்ற உருவமாகவா? எனக்கு புரியவில்லை.
இந்த காலத்தை தொடர்ந்து ‘வளர்ச்சி’ என்பது என்னையும் புள்ளியில் இருந்து வளர்த்து கொண்டுதான் இருந்தது. ‘நான்’ என்பது என்னவாக இருக்கப்பட்டுள்ளேன் என்று என்னால் கணிக்க முடியவில்லை. நேரமானால் உணவின் ஊட்டம் கிடைத்து விடுகிறது, என்றாலும் எத்தனை காலம் இந்த இருட்டு உலகில் வாழப்போகிறோம் என்னும் எண்ணம் வந்து விட்டது.
எண்ணம் என்று குறிப்பிடுவதால் நீங்கள் என்னை அறிவு பெற்ற மூளை வளர்ச்சி உடையவன் அல்லது உடையவள் என்று நினைத்து கொள்ளாதீர்கள். அது என்னவோ திடீரென்று இப்படி தோன்றும் போது எனக்குள் நானே “மூளை வளர்ச்சி” அடைந்து விட்டதாக நினைத்து கொள்கிறேன்.
ஆனால் மருத்துவ உலகம் என்னை இப்படி ஒப்பு கொள்ளுமா? என்று தெரியவில்லை. அவர்களை பொருத்தவரை ஒரு ‘கணக்கீட்டை’ வைத்து இதன்படி இருந்தால்தான் “மூளை வளர்ச்சி” என்று ஒப்பு கொள்வார்களோ?
அவர்கள் ஒப்பு கொள்ளாவிட்டாலும் எனது ‘செவிகள் கூட’ கொஞ்சம் ஓசைகளை கிரகித்து கொள்கிறது. அதாவது ‘சத்தம்’ என்னெதென்று யூகிக்க முடியாவிட்டாலும் ஏதோ ஓசை வருகிறது என்பது புரிகிறது.
நான் வாழ்ந்து கொண்டிருப்பது தரையுமில்லாமல் ஆகாயமுமில்லாமல் நடுவில் இருப்பது போல் உணர்கிறேன். என்னை சுற்றிலும் நீர் நீர்..நீரால் சூழப்பட்டுத்தான் இருக்கிறேன், என்றாலும் ஏனோ எனக்கு மூச்சு திணறலோ சுவாச பிரச்சினையோ எதுவுமற்றவையாக இருக்கிறது. அது எப்படி ? என்னும் எண்ணத்துடன் சுழன்று கொண்டிருக்கிறேன்.
நான் தரையுமில்லாமல், ஆகாயமுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னேனல்லவா? அது எப்படி என்று கேட்டீர்கள்? என்றால் சில சமயம் தரை போல் ஒன்று தட்டுப்படுகிறது. அதில் காலை வைத்து அழுத்தும்போது அது சற்று உள் வாங்கி என்னை மேலே தள்ளி விடுகிறது. மேலே தண்ணீருக்குள் அமிழ்ந்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி வருகிறேன். இது மகிழ்ச்சியான விளையாட்டாய் இருந்தாலும் சில சமயங்களில் சலிப்பு தட்டத்தான் செய்கிறது.
இது என்ன? இப்படியே விளையாண்டு கொண்டிருப்பது எத்தனை நாளோ? நீங்களே சிந்தித்து பாருங்கள் எங்கும் இருள், வெளிச்சம் என்பதே இல்லாத ஒரு இடத்தில் நீருக்குள் அமிழ்ந்தும் அவ்வப்போது தரை எங்கோ தென்படும் உணர்வும் அதில் உதறி கொண்டிருக்கும் கால்களை ஊன்றி நிற்க வழியில்லாமல் இப்படி சுற்றி சுற்றி வரும்போது.
கை கால்களை அசைக்க முடிந்தாலும், என்னுடைய பிடிமானம் எதை சார்ந்தோதான் இருக்கிறது என்பதை கூட உணரமுடிகிறது. அப்படியானால் இந்த கை கால்கள் வெறும் உதறல்களுக்கும், அசைவுகளுக்கும் தான் என்றால் என்னை பிடித்திருப்பது எது? கீழேயும் விடாமல் மேலையேயும் சென்று விடாமல் பம்பரம் போல் என்னை சுழற்றுவித்து ஆடிக்கொண்டிருக்கிறது எதோ ஒன்று. அது எதுதான் என்று தெரியவில்லை.
ஒரு நாள்..! மிகப்பெரும் மூச்சு விடும் சத்தம் என் காதில் பெரும் ஓசையாய் விழுகிறது. என் மூச்சு விடும் சத்தம் அதனுக்குள் அடங்கி ஒடுங்கி கிடக்கிறது. ஏன் இப்படி பெரும் சத்தத்துடன் மூச்சு விடுகிறார்கள்? யார் அவர்கள் புரியாமல் விழித்து கொண்டிருக்கையில் யாரோ என்னை பிடித்து கீழே தள்ளுவதை உணரமுடிகிறது. அதை தவிர்க்க மேலே வர முயற்சித்து பார்க்க அப்போது அந்த பெருமூச்சின் சத்தம் அதிகமாக கேட்க தொடங்குகிறது. அது மட்டுமல்ல, பல வகையான ஓசைகள் அதனுள் கூடவே கேட்கிறது.
திடீரென்று என் அருகே ஒரு சிரிப்பு, திகைத்து தலையை திருப்ப முயற்சிக்க, திரும்பாதே, உன்னை தீர்மானிக்க போகும் நாள் இன்று, இனி நீ விரும்பியோ விரும்பாமலோ இந்த உலகத்தை விட்டு தள்ளி விடப்போகிறேன். போ..போ.. வெளியே போ..என்னை மேலிருந்து கீழாக யாரோ வளைந்து தள்ளுவதும், அதற்கேற்றாற்போல் வெளியில் இருந்து பெருமூச்சும், அலறலும் நொடிக்கு நொடி உயர்ந்து கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் என்னுடைய எதிர்ப்பு எல்லாம் வீணாற்று. உள்ளிருந்து வெளிபட்ட பெரும் குழி ஒன்றிலிருந்து வெளியே தள்ளப்பட்டு விடுகிறேன்.
இது என்ன இடம்? இது வரை நீருக்குள்ளேயே இருந்து கொண்டிருந்த நான் நீர் எதுவுமில்லாமல் வெளியே வந்ததால் அந்த வெளிச்சத்தின் சூடு என் உடல் மீது பட்டு தெறிக்க, அதன் சூடு தாங்காமல் குவா..குவா.குவா.. கூச்சலிடுகிறேன்.
பொண்ணு புறந்திருக்கு…! மெத்தென்ற ஒருதொடு உணர்வு என் உடல் மீது பரவி என்னை சுத்தப்படுத்துவதை உணர்ந்தாலும், அது ஒரு வகையில் சுகமாக இருந்தாலும் அந்த அழுத்தத்தின் வேகத்தில் என் வேதனையை தெரியப்படுத்த அழுகையை வாயை குவித்து, உச்சகட்ட ஓசையில் ங்கா..ங்கா…ங்கா. சப்தமிட்டு வெளிப்படுத்துகிறேன்..
ஏ…என்னா… ரோசம் பாரு உன் புள்ளைக்கு யாரோ பக்கத்தில் சொல்வது காதில் விழுந்தாலும் அது ஓசை என்று மட்டும் புரிகிறது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Jan-25, 12:15 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : puthu ulakam
பார்வை : 23

மேலே