ஸ்ரீ அனந்தநல்லூர் மகாமாரியம்மன் கலித்தாழிசைப் பாடல்கள்

காப்பு
முத்தான தமிழ் தன்னை மூதாட்டி அவ்வைக்கு
வித்தாகத் தந்தவனே விநாயகப் பெருமானே
பித்தாக நானிங்கே நல்லுர்ப் பெருமாட்டிதனை
பத்தாகப் பாடல் செய்ய பக்கம் துணை இருப்பாய்
வானமது ஊற்றாக வைகையது ஆறாக
தேனமரும் பூக்களது திருவிழா விளக்காக
திங்களது குடையாகத் தேனீக்கள் பாட்டிசைக்க
மங்கலங்கள் சூழ்ந்திருக்க மாவிலைகள் வரவேற்க
தங்க நிறத் தாமரையாய் தேவிமுகம் சிரித்திருக்க
பொங்குகின்ற இன்பங்கள் புனலாகப் பெருக்கெடுக்க
வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கையற்கரசியே
எல்லோரும் எல்லாமும் பெற்றிங்கு இன்பமுடன் வாழ வரமளி(த்)தாயே
காணும் கனவெல்லாம் கருத்தாகி நின்று
தானும் நானு மென்னும் தன்னலம் போக்கி
வானிலும் மண்ணிலும் வயலிலும் வாழ்விலும்
ஊணிலும் உயிரிலும் ஊடுருவிச் சென்று
நாணுரும் மங்கையின் நல்லெழில் கோலமாய்
நான் கண்ட தேவமகள் நல்லாட்சிப் புரிந்திட
வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கையற்க்கரசியே
பொல்லாதத் துயர்ப் போக்கி நல்லார்க்கு நலமொன் றளி(த்)தாயே
சின்னஞ் சிறுமியாக செந்தமிழின் கண்ணாக
வண்ணமுறு நிலவாக வானத்து ஒளியாக
எண்ணமெங்கும் நிறைவாக ஏற்றந்தரும் கருவாக
தன்னலங்கள் தானொழிக்கும் தாரகையாக
கண்மூடி துதிப்பவர்க்கு கலங்கரை விளக்காக
பெண்ணினத்தை காக்கின்ற பெருஞ்சக்தி வடிவாக
வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கையற்க்கரசியே
எல்லோரும் எப்போதும் உன்னடிகள் வணங்கி வாழ்வதற்கு வரமளி{த்}தாயே
கலியான காலமிதில் சிலையாக நில்லாமல்
ஒளியாக வந்திங்கு ஒயிலாக நடமாடி
பொழிகின்றப் பொதிகைத் தென்றல் மழையாகி
தெளிவாக உணர்வோர்க்குத் தீந்தமிழ் சுவையாகி
சிவனில் பாதியாகி சிந்திப்பார்க்கு காவலாகி
மகிழ்வோடு எல்லோரும் வணங்குகின்ற மாரியாகி
வில்லோடு விழிகாட்டி விழியாலஅருள்கூட்டி - அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கையற்கரசியே
உன்னன்பர்கள் என்றும் அல்லலின்றி வாழ்ந்திடாசி ஒன்று அளித்தாயே
முல்லை முகிழ்த்திருக்க முகில்களங்கே முறுவலிக்க
வெள்ளை மன அன்பர்கள் வீதியில் நிறைந்திருக்க
எல்லையில்லா அருளே எங்கும் சூழ்ந்திருக்க
கிள்ளை மொழி மாதர் கீதம் இசைத்திருக்க
தொல்லை தரும் பிணிகள் விலகி ஓட
நல்லவர்கள் இங்கே நலமுடன் வாழ்ந்திருக்க
வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள் கூட்டி- அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கயற்கரசியே
இடர் நீங்கி இன்பமுடன் நாங்கள் வாழ அருள ளி(த்)தாயே
கயலாகும் கண்கள் கருணை மழைப் பொழிய
கால்களிரண்டும் கயவர்தம்மை கடிந் தொழிக்க
நீ கொண்ட கரங்களது நிதமருள் வழங்க
வான்கொண்ட திருமுகமாம் வண்ணத் தாமரையை
தேன்தேடும் வண்டாக தினம் நாடும் அன்பர்க்கு
மகா மாரியாக மங்கலக் காட்சிதந்து
வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கையற்க்கரசியே
வல்லூறாய் வேதனைகள் வாட்டுகின்ற நிலை மாற நல்லருள ளி(த்)தாயே
காத்தவராயன் காவலாய் நின்றிருக்க
பூத்த மலர்கள் பூமாலை தொடுத்திருக்க
சாத்திரம் படித்தவர் சரண மென்றிருக்க
தோத்திரம் பாடி தோரணங்கள் ஆட
பார்த்தவர் கண்களில் பைந்தமிழ் ஊற்றாக
வார்த்தெடுத்த வடிவாக வந்துதித்து இங்கே
வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கையற்ர்க்கரசியே
ஏழ்மையை வெல்லுகின்ற வழி யொன்று விரைந் தளி(த்)தாயே
வங்கக்கடல் தாண்டி வணங்குவர் தனை நோக்கி
சிங்கை நகர் சென்று செய்திகள் பல சொல்லி
மங்கை உன்னுருவை மானிடர்க்குக் காட்டி
உங்கள் துயர் தீர்க்கும் உமையவள் நானே
எங்கும் நிறைந்திருக்கும் சக்தியும் நானே யென்று
பொங்கும் உவகையோடு புரிய வைத்திங்கு
வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கையற்க்கரசியே
வல்லவர் நல்லவராய் வாழ்வதற்கு வகை யொன்று அளி(த்)தாயே
நாளோடு வாரமாக திங்களோடு ஆண்டாக
இரவோடுப் பகலாக எந்நேரமும் நினைவாக
உறவோடு உயிராக உள்ளத்துக் கனவாக
மறவாத நெஞ்சமிதில் மாரியென்னும் பெயராக
இறவாத இன்பமதை அன்பர்க்கு என்றும்
உருவாக்கி தந்து உமையாகி நின்று
வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த
நல்லூரில் அமர்ந்தவளே நங்கையற்க்கரசியே
பல்லாண்டு பக்தர்கள் பகையின்றி வாழ வாக்கொன்ற ளித்தாயே
வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள் கூட்டி -அனந்த
நல்லூரில் அமர்ந்தவளாம் நங்கயற்க் கரசியை
இதயத்தில் ஏற்றி எந்நேரமும் துதிக்கின்ற
கொந்தை அரங்கன் தந்த நல்லூர்ப் பாடல்களை
சிந்தை கலங்காது தியானித்து நாள் தொறும்
சித்தமுடன் பாடுகின்ற செந்தமிழ் வல்லார்
பொருளோடு அருளும் பொழியப் பெற்று
சித்திரையின் முழுநிலவாய் களங்கமின்றி
இத்தரையில் எல்லாமும் பெற்று உத்தமராய் வாழ்வர் உண்மை யிது